===மேஜர் ஏ.கே.ரவீந்திரன்===  கேரளாவைச் சேர்ந்தவர்… காந்தகார், குருஷேத்ரா, கீர்த்தி சக்கரா போன்ற ஏராளமான மலையாளத் திரைப்படங்கள் உட்பட பலமொழித் திரைப்படங்களை இயக்கியவர்…மணிரத்தனம், கமலஹாசன், ப்ரியதர்ஷன் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றியவர்…!எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய ராணுவத்தில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்…. இராணுவ மேஜர்…ஒரு தீவிரமான சங்க பரிவார் ஆதரவாளர்… பல பொது இடங்களில் சங்கபரிவாரின் பிரிவினைவாதத்தை விஷமாகக் கக்குபவர்… ஒரு வார்த்தை பேசினாலும் அதில் சங்கிகளின் விஷத்தை தடவ மறக்கவே மாட்டார்…சரி இப்போது அவரைப் பற்றி என்ன என்று கேட்கிறீர்களா…?நீங்கள் கேள்விப்பட்ட அந்த இந்துத்துவ விஷம் கக்கும் மேஜர் ரவி இப்போது இல்லை என்பது தான் செய்தி…கேரள பெருவெள்ளம் மேஜர் ரவி என்ற மனிதாபிமானியை உருவாக்கியுள்ளது…! இந்து உணர்வு பெறவேண்டும்…இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறித்திரிந்த மேஜர் ரவி, பிரிவினைவாதம் நமக்குத் தேவையில்லை என்று கூறுகிறார்…!

இனி மேஜர் ரவிக்கு பெருவெள்ளத்தால் ஏற்பட்ட அனுபவத்தை அவரே பகிர்ந்து கொள்கிறார்:

எங்கும் வெள்ளப்பெருக்கு… ஊரையே மூழ்கடித்த வெள்ளம்…கோயில், மசூதி யாவும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன… என்னுடைய பகுதியில் சுமார் 200 பேர் ஜலாலின் பள்ளிவாசலில் இருக்கிறார்கள்… அவர்கள் எல்லோரும் இந்துக்கள்…நான் என்ன செய்வது என்று புரியாமல் ஏதாவது செய்யமுடியமா என்று விசாரிக்க எங்கள் பகுதி காவல் நிலையத்திற்கு சென்றேன்…
அங்கே யாருமில்லை…

காவல்நிலையத்தின் வெளியே அசீஸ் என்றொரு இஸ்லாமிய இளைஞன் கையில் ஒரு டயரில் பயன்படுத்தும் டியூபுடன் நின்றுகொண்டிருந்தான்… நான் அவனிடன் விசாரித்தேன்…

“சார் எங்கள் பகுதி முழுவதும் மூழ்கிவிட்டது… மற்ற பகுதிகளிலிருந்து எங்கள் பகுதியே துண்டிக்கப்பட்டுவிட்டது… நான் இந்த டியூபின் உதவியுடன் ஒன்றரை கிலோமீட்டர் தண்ணீரில் நீந்தித்தான் வந்தேன்… இங்கே வரும்போது ஒன்றும் பிரச்சனை இல்லை… வெள்ளத்தின் போக்கிலேயே கொஞ்சம் எளிதாக வந்துவிட்டேன்… அங்கே, ஒரு வயது குழந்தையுடன் கர்ப்பிணியான தாய் வெள்ளத்தில் அகப்பட்டு கிடக்கிறார். அவரது கணவர் இப்போது அங்கு அவருடன் இல்லை… அவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காப்பாற்ற வேண்டும்… அதற்காக காவல்துறையின் உதவியைத் தேடி வந்திருக்கிறேன்…”

நான் அவனிடம் “நீ இப்போது யாரிடமும் உதவி கேட்கமுடியாது… நீ வா நாம் ஏதாவது செய்யலாமா என்று யோசிக்கலாம்…” என்று கூறியவாறே… “நாம் எப்படி அவர்களை காப்பாற்றிக் கொண்டுவருவது…இந்த டியூபை வைத்தா காப்பாற்றுவது?” என்று கேட்டேன்…
அவன் அதற்கு, “இல்லை சார்… அங்கே ஒரு படகு இருக்கிறது அதை எங்களுக்கு ஓட்டத் தெரியவில்லை…” என்றான்…

“அது பரவாயில்லை. படகை நான் ஒட்டுகிறேன்” என்று கூறி நாங்கள் இருவரும் புறப்பட்டோம்…
அங்கே போய்ச் சேர ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் ஆனது… அந்த அளவுக்கு வெள்ளப்பாய்ச்சலின் வேகம் கிழக்கு திசையிலிருந்து வந்துகொண்டிருந்தது… நாங்கள் கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் வடக்கு தெற்காக கிழக்கிலிருந்து வரும் வெள்ளத்தை எதிர்கொண்டு நீந்த வேண்டியிருந்தது… அவ்வாறு தான் கிழக்கிலிருந்து வரும் வெள்ளத்தை எதிர்கொண்டு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை… உண்மையில் அது சாகசமும் ஆபத்தும் நிறைந்த ஒரு செயல் என்று தோன்றியது… நான் அக்கணமே ‘எப்படி திரும்பிச்செல்வது’ என்பதைக் குறித்து எண்ணத் துவங்கினேன்… அந்த படகு இருந்தால் வந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்…

அதன்பிறகு நாங்கள் ஒரு ‘S’ வடிவ வளைவை அடைந்தோம்… எங்களால் அந்த வளைவை ஏறத்தாழ கடக்கவே முடியவில்லை என்று கூறலாம்…! எப்படியோ கடந்து சென்று சேரவேண்டிய இடத்தை… அதாவது அங்கேயுள்ள ஒரு மதரசாவை சென்றடைந்தோம்..!
அங்கிருந்தவர்கள் என்னைக் கண்டதும், இவர் எப்படி இங்கே வந்துசேர்ந்தார் என்று திகைத்துப்போனார்கள்… நான் அவர்களிடம் “படகு எங்கே?” என்று கேட்டேன்…
அவர்கள் சிரித்துக்கொண்டே படகை வேறொருவர் வெவ்வேறு பாகங்களாக பிரித்து எடுத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்கள்..!

“அதை வேறு எங்கோயோ மீட்புப் பணிகளுக்காக கொண்டு சென்றுவிட்டார்கள்” என்று கூறினார்கள்…!

‘படகு இல்லை… கைபேசி தொடர்புகளும் இல்லை…இனி எப்படி அந்தத் தாயையும் குழந்தையையும் மீட்க…?’ என்று எண்ணியவாறே அந்த மதரசாவில் உள்ள ஏழெட்டு இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை அவசரமாக உருவாக்கி, கயிறுகளையும் எடுத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் கையை பிணைத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நோக்கி செல்லத்துவங்கினோம்…!

வெள்ளத்தில் சிக்கிய ஒவ்வொருவரிடமும் நாங்கள் வந்துவிட்டோம் இனி பிரச்சனையில்லை என்று தைரியம் கூறிக் கொண்டே முன்னேறினோம்…!

ஏற்கனவே பள்ளிவாசலில் 300 அல்லது 400 பேருக்கு மேல் இருந்தார்கள்… 100 பேருக்கு மட்டும் தொழுகை நடத்த வசதியுள்ள தொழுகை அரங்கத்தில் அவ்வளவு அதிகமான பேர் உள்ளே தங்கியிருந்தார்கள்… அந்த பள்ளிவாசல் கமிட்டியின் தலைவர் ஜலாலும் அவரது நண்பர்களும் அவர்களால் முடிந்தவரை, தங்களிடம் இருந்த படகும் கயிறுகளும் எல்லாம் பயன்படுத்தி ஆட்களை காப்பாற்றி பள்ளிவாசலை நிறைத்துக்கொண்டிருந்தார்கள்…

பெண்களுக்கு கழிப்பிட வசதியில்லை… அதற்காக சேலைகளைக் கொண்டு மறைத்து கழிப்பிட வசதியை பள்ளிவாசல் மாடியின் மேலேயே ஏற்படுத்தி… என்ன சொல்லி புரியவைப்பதென்று எனக்குத் தெரியவில்லை…

மனிதாபிமானத்தின் இன்னொரு வடிவத்தை நான் அங்கே கண்டேன் என்று சொல்லலாம்…
மாலை நான்கு மணிக்கு நான் “இனி நம்மால் ஏதும் செய்ய முடியாது”… என்று அசீசிடம் கூறினேன், அதோடு “நான் திரும்பப் போகிறேன்” என்றேன்…!

அதற்கு அவன், “அப்படியென்றால் நானும் உங்களோடு வருகிறேன்” என்றான்… “சரி வா… அங்கே போய் ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்க்கலாம்… நாம் அங்கிருந்தே இந்த வேலைகளை செய்துகொள்ளலாம்” என்று அவனிடம் கூறினேன்… அவன் ஒத்துக்கொண்டான்…!
நாங்கள் புறப்பட்டோம்… 500 மீட்டர் கடந்திருப்போம்… அதற்கு மேல் எங்களால் முன்னேற முடியவில்லை… நாங்கள் மறுபடியும் மதரசாவுக்கு திரும்பினோம்…!

அங்கே எங்களோடு 20 இளைஞர்களும் இருந்தார்கள்… அருகில் உள்ள ஷாஜஹான் அண்ணன் எங்களுக்கு கஞ்சி சமைத்துத் தந்தார்… கஞ்சியை கயிற்றில் கட்டி அனுப்பினார்… அதுபோலவே, கொஞ்சம் பருப்பும் சமைத்து அனுப்பினார். ஆனால், அது வெள்ளத்தில் விழுந்து விட்டது…!வேறு வழியில்லாமல் அந்த கஞ்சியை மட்டும் குடித்தோம்… அங்கே இரண்டு மூன்று வாழைப்பழக் குலைகள் இருந்தன… அவைகளையும் சாப்பிட்டு அன்றைய இரவைக் கழித்தோம்..! அன்றைய இரவு கொடூரமாக இருந்தது… எங்களால் அந்த இரவில் ஏதும் செய்ய முடியவில்லை..!

காலையில் இராணுவ ஹெலிகாப்டர் வந்தது… நான் மொட்டைமாடியில் நின்று பார்க்கும்போது ஷாஜஹானின் வீட்டிற்கு அப்பால் மொட்டை மாடியில் கொஞ்சம் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்… நான் ஹெலிகாப்டரில் இருந்தவர்களிடம் அவர்களை முதலில் தூக்குங்கள் என்றேன்… அங்கிருந்து ஏழெட்டு பேரை காப்பாற்றினார்கள்… அவர்களிடம் திரும்பிவரச் சொன்னேன்…எனது முதுகை திருப்பி அவர்களுக்குக் காட்டினேன்… எனது சட்டையில் “இந்திய இராணுவம்” என்று எழுதியிருந்ததை அவர்கள் பார்ப்பதற்காக… அவ்வாறு எனது இருப்பை அவர்களுக்கு அறிவித்தேன்… என்றாலும் அவர்கள் திரும்பி வரவில்லை…!
ஆனால்… அது வீரதீரமாக எங்களை உணரவைத்த ஹெர்குலியன் தருணமாக தோன்றியது… அப்புறம் காலை 10.30-க்கு ஒரு இராணுவப் படகு மெதுவாக எங்களை நோக்கி வந்தது…!
நான் உரத்த குரலில் “நான்தான் மேஜர் ரவி” என்று கத்தினேன்… அவர்கள், “சார்… நாங்கள் பள்ளிவாசலுக்கு போய் ஆட்களை ஏற்றக்கொண்டு வரும்போது உங்களை ஏற்றிக்கொள்கிறோம் என்று கூறினார்கள்”…

பள்ளிவாசலில் இருந்து நாலைந்து ஆட்களை மட்டும் ஏற்றிக்கொண்டார்கள்… அதில் அதற்குமேல் ஆட்களை ஏற்ற இடமில்லை… மீண்டும் செய்வதறியாது நிலைகுலைந்துபோனேன்…!

கொஞ்சநேரம் கழித்து ஒரு மீனவரின் படகு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது… நாங்கள் இருந்த மதரசாவின் 25 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மட்டுமே அவர்களால் வரமுடியும்… வெள்ளம் வேகமாக செல்லும் இடம் அது…. நாங்கள் ஏற்கனவே கயிறு கட்டிவைத்திருந்தோம்…. அந்த கயிற்றை பிடித்துத்தான் படகு செல்ல முடியும்…அங்கிருந்தவர்கள், “சார். நீங்கள் இந்தப் படகில் செல்லுங்கள்.” என்று கூறினார்கள்…சிலர்,”இல்லை சார்…நீங்கள் போகக்கூடாது.” என்றனர்… அவர்களுக்கு, நான் சென்றுவிட்டால் திரும்பி வரமாட்டேன் என்ற அச்சம் இருந்தது… அவர்களிடம் நான் கூறினேன், “நீங்கள் பயப்படத் தேவையில்லை…நான் இங்கு உங்கள் இடத்திற்கு வந்தேன்… உங்கள் பிரச்சனை என்னவென்று தெரியும்… நீங்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளவேண்டாம்…!”

வேறுவழியே இல்லாமல் அரை மனதோடு, “சரி” என்றவாறு ஏழெட்டு பேர் வெள்ளத்தில் இறங்கி எனது கைகளையும் பிடித்து கயிற்றிலும் பிடித்துக் கொண்டு, படகை நோக்கி கொண்டு சென்றார்கள்… கயிற்றை பிடிக்கும் போது இரு கைகளையும் மாற்றி மாற்றி கவனமாக பிடித்துச் செல்ல வேண்டும்… ஒரு கையை விட்டு மறுகையை பிடிப்பதற்குள் சிறிது பிசகினால் கூட கயிறு கையை விட்டு போய்விடும்… காரணம் அவ்வளவு வேகத்தில் வெள்ளப்பாய்ச்சல் இருந்தது…7 அடிக்குமேல் உயரத்தில் வெள்ளம் பொங்கியவாறு வந்து கொண்டிருந்தது…. எப்படியோ நான் படகை நெருங்கினேன்…!

படகைச் சென்றடைந்ததும் படகுகாரர் சில்வஸ்டர் என்னைப் பார்த்து ஆச்சரியமடைந்து, “நீங்கள் எப்படி இங்கே..? நீங்கள் மேஜர் சார் தானே” என்று கேட்டார். நான், “ஆமாம்” என்று கூறினேன்…” சரி எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம் இங்கிருந்து கிளம்புவோம்” என்று கூறியவாறே படகைச் செலுத்தினார்…! படகில் ஒரு போலீஸ்காரர், அந்தப்பகுதி வார்டு கவுன்சிலர் ஷ்யாம் ஆகியோரும் இருந்தனர்… அவர்கள், வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு, தங்களிடம் இருக்கும் குறைந்த அளவு உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக்கொண்டு வருகின்றனர்…!

நான் அவர்களிடம், ”எங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம்… என்னை அங்கே கொண்டு சேர்த்தால் போதும் நான் பார்த்துக்கொள்ளுவேன்… எனக்கு வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் மட்டும் போதும்…!” என்றேன்…!
அப்படி வழியிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆட்களையும் ஏற்றிக்கொண்டு மெதுவாக சென்று கொண்டிருந்தோம்….

அந்த ‘S’ வளைவை நெருங்கினோம்…

அந்த வளைவை கடக்கும்போது தான் அந்த மீனவர்களின் தொழில்ரீதியான திறமையைக் கண்டு நான் அசந்துபோனேன்…!

படகு எஞ்சின் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது… இருபுறமும் ஒவ்வொருவர் அமர்ந்து மாற்றி மாற்றி துடுப்புகளை போடுகிறார்கள், இன்னொருவர் என்ஜினை தேவைப்படும்போது இயக்குகிறார் அல்லது நிறுத்துகிறார்… இப்படியாக அவர்கள் அந்த ‘S’ வளைவைக்

கடக்கும்போது சாகசம் செய்தது போன்று இலகுவாக கடந்தார்கள்…!
இது இவர்களால் மட்டுமே முடிகின்ற செயல் என்று உணர்ந்தேன்…!

“நீங்கள் இது போன்ற வேளைகளில் தான், ஒவ்வொரு சாதரண குடி மகனுக்குள்ளும் மறைந்து இருக்கும் ஹீரோக்களை உணர்ந்து அறிய முடியும்..!” என்னைப் போல் சிலர் நினைக்க முடியும் நான் இராணுவத்தில் இருந்தவன் என்றெல்லாம்… அதனால் எந்த பலனும் இல்லை…!
எல்லோரும் அடுத்தவர்களை காப்பாற்றும்போது ஹீரோக்களாக மாறவே செய்கிறார்கள்…!
அதோடு, பள்ளிவாசல்கள், கோயில்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதை நான் பார்த்தேன்…அந்த வேளையில் பள்ளிவாசலில்… அதாவது ஜலாலின் பள்ளிவாசலில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்… அதுவும் இந்து குடும்பங்கள் பாதுகாப்பாகத் தங்கினார்கள்…!

நான் உங்களை ஒன்று கேட்கிறேன்… நாம் இத்தகைய வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்கள் இல்லாத நேரங்களில் கோயில்களில் உள்ளவர்கள் பள்ளிவாசலில் போனாலோ, பள்ளிவாசலில் உள்ளவர்கள் கோயிலில் போனாலோ புனித நீர் தெளிப்பதும், மற்ற சுத்தப் படுத்தும் வேலைகளை செய்வதும் போன்ற செயல்களை செய்தவர்கள்…!

ஆனால் எப்படி இதையெல்லாம் மறந்து, இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள்…?
அப்படியென்றால், உயிர் போகும் என்ற நிலை வரும் போது உங்களுக்கு ஜாதியில்லை, மதமில்லை ஏதுமில்லை… அந்த நேரங்களில் நாம் நமக்குள் உதவிகளை செய்து காப்பாற்றிக் கொள்கிறோம்…!

அந்த நல்ல எண்ணத்தை நாம் இனிவரும் காலங்களிலும் ஏன் நமது மனதுக்குள் வைத்து போற்றக்கூடாது…!

நாம் புதியொரு கேரளத்தை வார்த்தெடுக்க வேண்டும்…
பழைய கேரளத்தில் இருந்த இதுபோன்ற அழுக்குகள் எல்லாம் இந்த பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது…!
ஆனால், இப்போது கொஞ்சம் விஷப்பாம்புகள் மறுபடியும் வெளியே தலைகாட்டத் துவங்கியுள்ளன…!

ஜாதி, மத துவேஷங்களை உருவாக்குகின்ற செயல்கள் தான், அவர்களது வாழ்வாதாரம்…!
அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது… இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, நான் சொன்னால் கேட்கின்ற என்னைச் சார்ந்த ஆட்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்…! இனி எப்போதும் இது போன்ற செயல்களை சமூகத்தில் அனுமதிக்க மாட்டோம்…!

எல்லா நேரத்திலும் இப்படிப்பட்ட விஷயங்களை சிந்திப்பதற்கு பெருவெள்ளம் தான் வரவேண்டுமென்றால் அது நடைமுறை சாத்தியமற்றது…!
இந்த ஒரு அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு… இனி வரும் வாழ்வின் பகுதிகளில் மனிதநேயத்தை பயன்படுத்துவோம்…!

தமிழில் : கே. சதாசிவன்

 

Leave a Reply

You must be logged in to post a comment.