சிவகாசி:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இருவரும், தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

முன்னதாக சிவகாசியில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது : பிஏசி எல் நிதி நிறுவனம் இந்தியா முழுவதும் 48 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது. ஆனால், முதிர்வுத் தொகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் 48 ஆயிரம் கோடி பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை.

எனவே, வாடிக்கையாளர்களை ஒன்று திரட்டி மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். தி.மு.க தலைவராக தேர்வாகியுள்ள மு.கஸ்டாலினுக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கலைஞர் 50 ஆண்டுகள் தி.மு.க தலைவராக சிறப்பாக செயல்பட்டது போல் மு.க ஸ்டாலினும் மிகச் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் குடிமராமத்து பணிகள் முறையாக செய்யாததால் காவிரி நீர் இது வரை கிடைக்கவில்லை. இது கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக உள்ளது. வறட்சியால் பாதிக்கப்படும் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் பெறும் காவிரி- வைகை- குண்டாற்று திட்டத்தை போர்க்கால அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவிரி- வைகை- குண்டாற்று திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் 120 டி.எம்.சி தண்ணீரை வீணாகாமல் சேகரித்திருக்கலாம்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் மட்டுமல்ல 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளிலும் தேர்தல் வரலாம். அப்படி தேர்தல் வந்தால் ஆட்சியில் உள்ள கட்சியை அகற்ற யாருடன் கூட்டணி வைக்க வேண்டுமோ அவர்களிடம் கூட்டணி வைப்போம் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.