சேலம்,
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண நிதி மற்றும் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிதி மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, கல்வராயன் மலை மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் இடைக்குழுக்களின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின்மாவட்டக் குழு அலுவலகக்தில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்வராயன் மலை இடைக்கமிட்டியின் செயலாளர் எ.பொன்னுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் வி.சின்னமணி, வெங்கடேஷன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், வாழப்பாடி- அயோத்தியாப்பட்டணம் இடைக்கமிட்டி சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.4.50 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கேரளாவிற்கு கொண்டு சென்ற வாகனத்தை பூவனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெள்ளச்சி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பொருட்களை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்,குழந்தைவேல், எ.ராமமூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.கந்தசாமி, அயோத்தியாப்பட்டணம் செயலாளர் ஜி.பூபதிதலைமையிலான குழுவினர், பாலக்காடு சிபிஎம் அலுவலகத்தில் கேரளா கோஆப்ரேட்டிவ் டெவலப்மென்ட் போர்டு மாநில வைஸ் சேர்மன் மம்மி குட்டியிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளையம் தெற்கு, நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர் மற்றும் சிஐடியு மாவட்டக் குழு சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமணி தலைமையிலான குழுவினர் பாலக்காட்டிலுள்ள சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக, இந்த வாகனத்தை வழியனுப்பும் நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ந.வேலுசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.பி.ஆறுமுகம், ஆர்.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.