கோவை,
கோவையில் மாநகராட்சி பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்துள்ள ரியல் எஸ்டேட் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்கக்கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக , கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்அளித்தமனுவில் கூறியிருப்பதாது: நாங்கள் வசிக்கும் பகுதியில் இயங்கி வரும் கோவை மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். குறிப்பாக, பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான இடம் என நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு ரியல் எஸ்டேட் அதிபர்கள் அம்மைதானத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காதது வேதனையளிக்கிறது. மேலும், இப்பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் சார்பில் இயக்கம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுக்கிற நிலை இருந்து வருகிறது.

இதனால் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், காவல்துறை அனைத்தும் இணைந்து ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு துணை நிற்கிறதோ என்கிற சந்தேகம் வந்துள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய தலையீடு செய்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என மனு அளித்தனர். முன்னதாக, இம்மனுவினை அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: