மதுராந்தகம்,
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு மேச்சேரி சாலை, திரு.வி.க. நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த மூன்று மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுக்குழாய் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் குறைந்த நேரம்விடுவதால் தண்ணீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, “மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள குடிதண்ணீர் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேச்சேரி சாலை, திரு.வி.க. நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிட அப்பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் பிரச்சனை போக்கப்படும்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: