தீக்கதிர்

மணல்திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மணல் குவாரி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கொள்ளை நடப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திங்களன்று (ஆக.27) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மணல் கொள்ளை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் கொடுத்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து மணல் கொள்ளை சம்பவம் நடந்து கொண்டே இருக்கின்றன. அரசு குவாரி இல்லாமல் தனி நபர்கள் ஆறு மற்றும் ஏரிகளிலிருந்து மணலை கொள்ளையடித்து செல்வதால் தடுப்பணைகள், ஆற்றுப்பாலங்கள் அடுத்த மழைக் காலங்களில் நிச்சயம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மணல்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.