கோவை,
புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோவையில் நூற்றுக்கணக்கான பஞ்சாலை தொழிலாளர்கள் திங்களன்று ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் தமிழகத்தில் ஏழு பஞ்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய சம்பள ஒப்பந்தம் போடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மே மாதமே ஒப்பந்த காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இதுவரை போடப்படவில்லை. இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம், பஞ்சப்படி, வீட்டு வாடகை படி, பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு, தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டியுசி, ஏடிபி ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள் என்டிசி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் என்டிசி நிர்வாகம் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை.

இதனையடுத்து கடந்த ஆக.20 ஆம் தேதி முதல் என்டிசி பஞ்சாலை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எட்டாவது நாளாக நடைபெறும் இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக திங்களன்று ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைத்திடக்கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் தலைவர் பார்த்தசாரதி, சிஐடியு பஞ்சாலை சங்க பொதுச்செயலாளர் சி.பத்மநாபன், ஐஎன்டியுசி சீனிவாசன், ஏடிபி தனகோபால் ஆகியோர் தலைமை தாங்கி உரையாற்றினர். சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள் பங்கேற்று என்டிசி நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக, கோவை மாவட்டத்தில் உள்ள ஐந்து என்டிசி பஞ்சாலை கழக வாயில்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், சிஎஸ்டபுள்யு பஞ்சாலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடைபெற்றது. என்டிசி பஞ்சாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 8 கோடிரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் நலன் குறித்து எவ்வித அக்கறையில்லாமல் என்டிசி நிர்வாகம் மற்றும் மத்திய அரசு இருப்பதாக தொழிற்சங்க தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.