கோவை, ஆக. 27 –

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் தேசிய பஞ்சாலை கழக நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து நூற்றுக்கணக்கான பஞ்சாலை தொழிலாளர்கள் திங்களன்று ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இயங்கும் ஏழு பஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ்  இயங்கி வருகின்றது. பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம்போடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மே மாதமே ஒப்பந்த காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இதுவரை போடப்படவில்லை.

பஞ்சப்படி, வீட்டு வாடகை படி, பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு,  தினக்கூலி தொழிலாளர்களை நிரந்திரப்படுத்துவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. பஞ்சாலை தொழிலாளர்களால் தேர்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டியுசி, ஏடிபி ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் என்டிசி நிர்வாகம் எவ்வித உடன்பாட்டிற்கும் வாராமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஆக.20 ஆம்தேதி முதல் என்டிசி பஞ்சாலை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்ததில்  ஈடுபட தொழிற்சங்கங்கள் அறைகூவலையேற்று வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.  எட்டாவது நாளாக நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைத்திட கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றஆர்பாட்டத்திற்கு எல்பிஎப் தலைவர் பார்த்தசாரதி, சிஐடியு பஞ்சாலை சங்க பொதுச்செயலாளர் சி.பத்மநாபன், ஐஎன்டியுசி சீனிவாசன், ஏடிபி தனகோபால் ஆகியோர் தலைமை தாங்கி உரையாற்றினர். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள் பங்கேற்று என்டிசி நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக கோவை மாவட்டத்தில் உள்ள ஐந்து என்டிசி பஞ்சாலை வாயில்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும், சிஎஸ்டபுள்யு பஞ்சாலையில் கஞ்சி காச்சும் போராட்டம் நடத்தியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

என்டிசி பஞ்சாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் இதுவரை 8 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் தொழிலாளர்கள் நலன் குறித்து எவ்வித அக்கறையில்லாமல் என்டிசி நிர்வாகம் மற்றும் மத்திய அரசு இருப்பதாக தொழிற்சங்க தலைவர் சி.பத்மநாபன்  தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: