புதுச்சேரி,
விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யக் கோரி புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி விவசாயிகள் நடைபயணம் துவங்கியது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்த விவசாய பொருட்களுக்கான விலை நிர்ணயத்தை மத்திய-மாநில அரசுகள் வழங்க வேண்டும்., புதுச்சேரி, கரசூர், காரைக்கால், போலகம் பகுதியில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அவர்களிடமே வழங்க வேண்டும். புதுச்சேரியிலுள்ள இரண்டு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி இரண்டு குழுக்கள் நடைபயணம் மேற் கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாக, திருக்கனூர் கே.ஆர். பாளையத்தில் துவங்கிய நடைபயணத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க கவுரவத் தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர் சங்க பிரதேச செயலாளர் உலகநாதன் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் சங்கர், நிர்வாகிகள் ராமமூர்த்தி, அன்புமணி, குப்புசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். மன்னாடிபட்டு, வாதானூர், விநாயகன் பட்டையை கடந்து வில்லியனூரை வந்தடைந்தது.

சோரியாங்குப்பம்
சோரியாங்குப்பத்தில் துவங்கிய மற்றொரு பயணக்குழுவுக்கு விவசாயிகள் சங்க பிரதேச துணைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன் துவக்கி வைத்தார்.சிபிஎம் பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன், சங்க நிர்வாகிகள் முத்துலிங்கம், சிவபிரகாசம், ராமசாமி, முருகையன், சரவணன், ஹரிதாஸ், பக்கிரி, சக்திவேல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். குருவிநத்தம், பாகூர், அரங்கனூர், ஏம்பலம், மங்கலம் வில்லியனூரை வந்தடைந்தனர்.

முதல்வரிடம்…
இந்த பயணத்தின் இறுதியாக செவ்வாய்க்கிழமை(ஆக.28) மாலை முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.