சிவகாசி:
பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க சிஐடியு, ரோட்டிலும் கோர்ட்டிலும் போராடி வருகிறது என, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிவகாசியில் நடைபெற்ற பட்டாசுத் தொழிலாளர் பாதுகாப்பு மாநாட்டில் கூறினார்.

அதில் மேலும் அவர் கூறியதாவது:-
மோடி ஆட்சியில் சிறு தொழில்கள் அழிக்கப்படுகின்றன. லாரி உரிமையாளர்கள், டோல்கேட் கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து 10 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். ஒரு நாடு என்றால் புதிய, புதிய தொழில்கள் வர வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டும். ஆனால், பாஜக ஆட்சியில், இருக்கும் தொழிலும் அழிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாலை, விசைத்தறி, பின்னலாடை, பட்டாசு, ரப்பர் ஆகிய அனைத்துத் தொழில்களும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக அரசு, கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரியால் இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழில்களும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பு நீக்கத்தை கொண்டு வந்துள்ளோம் என பாஜகவினர் தம்பட்டம் அடித்தனர். ஆனால், என்ன நடந்தது? பெரு முதலாளிகள் வைத்திருந்த கருப்புப் பணம் முழுவதும் வெள்ளையாக்கப்பட்டன.

இந்நிலையில், பட்டாசுத் தொழில், மூலப் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்படைந்துள்ளது. விலை உயர்வை ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், மோடி ஆட்சியில் எந்த பொருளின் விலையையும் கட்டுப்படுத்தவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை உயர்கிறது. இதையெல்லாம் ஆளும் அரசு கட்டுப்படுத்தாமல், வேடிக்கைப் பார்க்கிறது.

அப்படியென்றால் இந்த அரசு யாருக்காக உள்ளது?
உலகமயத்தை கடைப்பிடித்த அமெரிக்கா கூட, தற்போது வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய கடுமையான வரியை விதிக்கிறது. ஏனெனில் உள்நாட்டு தொழில் பாதிப்பதால் தான். இந்தியாவில் உள்ள தொழில் பாதிக்கும் போது ஏன்? வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். குறிப்பாக, பட்டாசுத் தொழிலைப் பாதிக்கும் வகையில் சீனப் பட்டாசு இறக்குமதியாவதை ஏன்? பாஜக அரசு தடுக்கவில்லை?
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கின் பெயர் ‘‘இந்தியன் மேட் பாரின் லிக்கர்’’. அதேபோல் தான் நரேந்தி மோடி. எப்படியெனில், ‘‘இந்தியன் மேட் பாரின் நேசனல்’’
எல்லோருக்கும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் எனக் கூறினார்.

அனைவரும் துவங்கி பணம் போட்டனர். ஆனால், தற்போது குறைந்தபட்ச தொகை கணக்கில் இல்லாவிட்டால் அபராதம் எனக் கூறிவிட்டார். இதனால், மக்களின் சேமிப்பு அபராதமாக சென்று விட்டது. மேலும், நீரவ் மோடி போன்ற பெரும் பணக்காரர்கள் வங்கிப் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டனர். இதை மத்திய அரசும் தடுக்கவில்லை.
தற்போது இந்தியாவில் சுற்றுச் சூழல் பயங்கரவாதம் ஏற்பட்டுள்ளது. பட்டாசால் சுற்றுச்சூழல் மாசு எனக் கூறியுள்ளனர். எனவே, இத்தொழிலை பாதுகாக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் சிஐடியு வழக்குப் போட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபட, பட்டாசு தான் காரணமா? இல்லை. வாகனத்தால் ஏற்படும் புகை மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் புகை காரணம். உலகத்தில் எல்லா நாடுகளிலும் பட்டாசு உள்ளது.

தொழிற்சாலை புகையை கட்டுப்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். இதனால் முதலாளிகளின் லாபம் சிறிது குறையும். ஆனால், அவர்கள் அதற்கு தயாராக இல்லை. அரசு கடுமையான விதிமுறைகள் விதித்து அதை சரி செய்ய முடியும்.

சிங்கப்பூரில் ஒருவர் மட்டும் காரில் பயணம் செய்தால், காவல்துறையினர் அந்தக் காரை நிறுத்தி விடுவார்கள். பின்பு, அந்தக் காரின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பார்கள். குறைந்தபட்சம் 4 பேர் பயணம் செய்தால் மட்டுமே காரைப் பயன்படுத்த வேண்டும். அல்லது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என சட்டம் உள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு கோடி வாகனங்கள் வெளி வருகின்றன. பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அதன் மூலம் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும்.

துவக்க விழா என்றால் பட்டாசு தான் வெடிக்கப்படும். சமீபத்தில் உலகக் கோப்பை கால்பந்து துவக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடிக்கப்பட்டது. நிறைவு விழா என்றாலும் பட்டாசு வெடிக்கப்படும். ஒரு நாள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இருப்பதை தடுக்கக் கூடாது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும். எனவே, இத்தொழிலைப் பாதுகாக்க சிஐடியு ரோட்டிலும் கோர்ட்டிலும் போராடி வருகிறது. இத்தொழிலை முன்னேற்ற, உலகம் முழுவதும் பட்டாசை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகத்திற்கே இங்கு பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறு செய்தால், அத்தொழிலில் மேலும் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

முன்னதாக சிவகாசி பாவடி தோப்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சிஐடியு-பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜே.லாசர் வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் பி.பாண்டி தீர்மானங்களை முன் மொழிந்தார். மாநில துணைத் தலைவர் சிங்காரவேலு விளக்கிப் பேசினார். மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்டப் பொருளாளர் கே.கண்ணன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.