மதுரை:
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு திங்கட்கிழமை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட முருகன் தரப்பு வழக்கறிஞர், நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் எந்த இடத்திலும் அவர் நேரடியாக மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பதாக பதிவாகி இருக்கவில்லை. இதில் மூன்று பேரை மட்டும் குற்றவாளியாக்கி வழக்கை  முடிக்க சதி நடக்கிறது என்று கூறிய அவர்,விசாரணையை நியாயமாக நடத்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.

இதனையடுத்து செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் சிபிசிஐடி அதிகாரிகளை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார். மேலும் முதல் குற்றவாளியான நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.