இஸ்லாமாபாத்;
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் மீது 3 ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. லண்டனில் சொகுசு இல்லம் வாங்கிய வழக்கில், நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் என 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, நவாஸ் ஷெரீப் மீது அல்-அஜீஜியா எஃகு ஆலை உட்பட மேலும் 2 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை முடிக்க இதுவரை 4 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி முகமது அர்ஷத் மாலிக், கால அவகாசம் வேண்டி கடந்த வாரம் எழுத்துப்பூர்வமான மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை துவங்கியது. இந்த விசாரணையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வாரம் ஒருமுறை விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 6 வாரங்களுக்குள் நவாஸ் ஷெரீப் மீதான வழக்குகளை விசாரித்து முடிக்குமாறு தலைமை நீதிபதி சகிப் நிசார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.