===முனைவர். தி.ராஜ்பிரவீன்===
கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டிலும், மேலை நாடுகளிலும் நடத்தப்பட்ட வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக சத்துகள் குறைந்த மண்ணில் உயிர் கரிச்சத்து (BIOCHAR) பயன்படுத்துவதன் வாயிலாக மழையில்லாத வறண்ட பகுதிகளில் கூட நிலைத்த வேளாண் உற்பத்தி சாத்தியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் நிலையில்லாத மழை மற்றும் அதிகளவு கருவேல மரத்தின் தாக்கத்தினால் விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள சாகுபடி நிலங்கள் அழிந்து வருவதுடன் தரிசு நிலங்களாகவும் உருமாறி வருகிறது.

இத்தகைய நடைமுறை சூழலில் உழவு சார்ந்த பணிகள் தொடர்ந்து குறைந்த காரணத்தால் நமது பாரம்பரிய இயற்கை சாகுபடி பணிகளை மேற்கொள்ள போதிய அளவு தொழு உரத்தையும் சிறு மற்றும் குறு விவசாயிகள் தயார் செய்து பயன்படுத்த முடியவில்லை. இத்தகைய சூழலில் மண்ணின் வளத்தை பெருக்கவும் மண் கரிம அளவை அதிகரிக்கச் செய்யவும், ஆரோக்கியமான மண்ணிற்கு உயிர் கரிச்சத்து (BIOCHAR) முக்கிய பங்கு வகிக்கிறது.

உயிர் கரிச்சத்து என்றால் என்ன?
எரியூட்டப்படும் உயிர்ப் பொருளிலிருந்து பெரும் திடப் பொருளயே உயிர் கரிச்சத்து எனப்படும் தமிழகத்தில் வறண்ட பகுதிகளில் அதிகம் உள்ள கருவேல மரம் அதிகமாக உயிர் கரிச்சத்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது மண்ணின் தன்மையை பாதுகாப்பதுடன் பசுமை குடில் வாயுக்களை இயற்கையாக வலுவிழக்கச் செய்யவும் பயன்படுகிறது.மேலும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மண்ணில் பல நுண்ணுயிர்களுக்கு உகந்த வாழ்விடமாக இருந்து பூச்சி தாக்குதல் மற்றும் காய்வதிலிருந்தும் பாதுகாக்க தேவையான பல்வேறு தாது சத்துக்களை உயிர் கரிச்சத்து வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பயிர் வளர்ச்சியில் சிறந்த மண் ஊக்கியாகவும் பயன்படுத்தலாம் என்றும் வேளாண் ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிர் கரிச்சத்து பயன்படுத்தும் முறை
உள்ளூரில் கரி செய்பவர்களிடம் உயிர் கரிச்சத்து செய்ய கருவேல மரக்கரியை வாங்கி கரித்துண்டுகளை தரம் பிரித்து, கரிச்சத்து தூள் தயாரிப்பதற்கு உகந்தவற்றை உறுதி செய்ய வேண்டும். பின்னர் காற்று புகாத பாலிதீன் அல்லது சாக்குப் பைகளில் இதனை நிரப்பி பாதுகாப்பாக வைக்க வேண்டும். இல்லையென்றால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கரித்தூளின் தரம் பாதிக்கப்படும். பின்னர் 2x2x1.5 அடி(முறையே அகலம் x நீளம் x ஆழம்) கொண்ட குழிகள் எடுக்கப்பட்டு, இதில் பாதி அளவு மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும்.

பின்னர் 2 முதல் 3 இஞ்சுகள் வரை உரத்தை நிரப்ப வேண்டும். மேலும் 2-3 இஞ்சுக்கு மீண்டும் மேல் மண்ணை நிரப்ப வேண்டும். பின்னர் உயிர் கரிச்சத்தை மண் மற்றும் உரத்தையும் நேர்த்தி செய்து நிரப்ப வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட நிலத்தில் கத்திரி, வெண்டை, தக்காளி, வெங்காயம், பெரிய அவரை, கொத்தவரை, முருங்கை போன்றவற்றை மண்ணின் தன்மை மற்றும் சீதோஷ்ண நடைமுறை சூழலுக்கு ஏற்ப விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் பூக்கும் பருவத்தில் இதனை பயிருக்கு இட்டால் சிறந்த மண் ஊக்கியாக செயல்பட்டு அதிக காய்கள் பெற்று தரும். மேலும் மல்லிகை சாகுபடிக்கு இதனை பயன்படுத்தும் போது பூ மொட்டுகள் பெரிதாக வளரும், அதிக எடை மற்றும் மணம் கொண்டதாகவும் இருக்கும். மேலும் உயிர் கரிச்சத்து மற்றும் உள்ளூர் இயற்கை உரங்களை மண்ணில் இடும்போது மண்ணின் வடிவ அமைப்பு (மொத்த அடர்த்தி) மற்றும் மண்ணின் இரசாயன பண்புகள் வெகுவாக மாற்றமடைகிறது. அமிலத்தன்மை, சத்து விநியோகம் மற்றும் எதிரயனி மாற்று திறன் ஆகியவை மாறி மூன்று பயிர் பட்டம் வரை இதன் தாக்கம் காணப்படுகிறது. இவ்வாறு உயிர் கரிச்சத்து மண் ஊக்கியை பயன்படுத்துவதன் வாயிலாக வெங்காய சாகுபடியில் 25 சதவீதமும், தக்காளியில் 30-40 சதவீதம் அதிக சாகுபடியும், பீன்ஸில் 30-50 சதவீத சாகுபடியும் அதிகரித்து விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

எனவே வளங்குன்றிய நிலங்களில் குறைந்தளவு மழையளவு கொண்டு சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகள், நடுத்தர மற்றும் பண்ணை மகளிர் குறைந்த செலவில் அதிகளவு லாபம் மற்றும் மகசூல் பெற்று தரும் உயிர் கரிச்சத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். மேலும் விளை நிலங்களை பரவலாக தாக்கும் கருவேல மரங்களை ஆக்கப்பூர்வமான முறையில் மறுசுழற்சி செய்து அதிகளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெற முடியும்.

கட்டுரையாளர் : உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Leave a Reply

You must be logged in to post a comment.