சென்னை;
சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பின் நாசா செயற்கைக்கோள் உதவியுடன் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரூ.323 கோடி பழைய, கிழிந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டன.

சேலத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் பணப்பெட்டி கொண்டு வரப்பட்டது. அதில் ரயில் பெட்டியின் மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இந்த கொள்ளை தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி எந்த தகவல்களும் கிடைக்காத நிலையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சிபிசிஐடியில் புதிய ஏடிஜிபியாக அம்ரேஷ் புஜாரி பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவரது உத்தரவில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. இதில் அதிகாரிகள் நாசாவிடம் குறிப்பிட்ட நாள், நேரம் குறித்து தகவல் கொடுத்து அதற்கான படங்களை கேட்டு உதவி கோரினர்.

நாசா உதவியுடன் செயற்கைக்கோள் படம் கிடைத்தவுடன் போலீசாருக்கு எந்த இடத்தில் கொள்ளை அடிக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தது. அதன் பின்னர் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயக்கப்பட்ட செல்போன் எண்களை சேகரித்தனர். இதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட எண்கள் கிடைத்தன. அவைகளை ஆராய்ந்தபோது அவை மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிய வந்தது. அவர்களில் பலரை சிபிசிஐடி போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.