வேலூர்,
நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான மாற்றுத்திறனாளிகள் தடகளப் போட்டிகள் நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் இம் மாதம் 24 ஆம் தேதி தொடங்கி ஆக.7 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றன.  இந்தியா சார்பில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பொதுப் பிரிவில் தட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் வேலூரைச் சேர்ந்த காத்த முத்துவேல் இரு தங்கப் பதக்கத்தை வென்றார். வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் கேசவன், ராஜேஸ்வரி தம்பதியின் 4-ஆவது மகன் காத்த முத்துவேல், எம்.ஏ., பி.எட்படித்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவர், 11-ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். நேபாள நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இரு தங்கம் வென்றுள்ளார்.

காத்தமுத்துவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது:- விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற வேலூரில் நவீன விளையாட்டு மைதானத்தை அரசு விரைவில் அமைக்க வேண்டும். தமிழக அரசு ஒலிம்பிக், உலகக் கோப்பை, காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் ஆகியவற்றில் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமே விருது, ஊக்கத் தொகை அளிக்கிறது. அதிலும், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பாதித் தொகையே வழங்கப்படுகிறது. இதை அரசாணையில் மாற்றம் செய்து சர்வதேச போட்டிகளில் வெல்லும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பாரபட்சமின்றி ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த தொழிலாளி மணி, வளர்மதி தம்பதியின் மகன் வெங்கடாசலமும் நேபாள நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சக்கர நாற்காலி பிரிவில் தட்டு எறிதலில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.