அகமதாபாத்:
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் மேலும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டும்  உள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, குஜராத் மாநில  கோத்ரா ரயில் நிலையத் தில், அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்.6 பெட்டி அடையாளம் நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் அந்த பெட்டியினுள் இருந்த  59 பேர் தீயில் கருகி இறந்தனர்.
இதைத்தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில்  சிறுபான்மையினர் சுமார் 1200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே,  31 பேருக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம்  கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 63 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து  விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மாநில அரசு குஜராத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது தனியாக விசாரணை நடைபெற்று வந்தது.
இவர்கள் மீதான வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் பரூக் பனா மற்றும் இம்ரான் ஷேரு ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ள 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்தும்  சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெச்.சி. வோரா  உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.