கேரளாவில் வெள்ள நிவாரண நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு இரண்டாவது தவணையாக 25 லட்சம் ரூபாயும், 2 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்களும் அனுப்பி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவலின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் மாவட்டக்குழுக்கள், வர்க்க, வெகுஜனஅமைப்புகள் மற்றும் கட்சித்தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர்  மாநில மையத்திற்கு நிதி அனுப்பி வருகின்றனர்.
இதுவரை மாநில மையத்திற்கு வந்த நிதியில், ஏற்கெனவே 21ம் தேதி முதல் தவணையாக ரூபாய் 20 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இரண்டாவது தவணையாக 25 லட்சம்  ரூபாயை கேரள மாநில முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை ரூபாய் 45 லட்சம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதேபோல் ஆங்காங்கு உணவு பொருட்கள், துணி மணிகள் ஆகியவற்றை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
2 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, எண்ணெய், பருப்பு, பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள்,புடவை,  சட்டை, பேண்ட், சுடிதார், போர்வை உள்ளிட்ட துணிமணிகள், மருந்து பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து ஆங்காங்கே உள்ள கட்சியின் மாவட்டக்குழுக்கள் கேரளாவில் உள்ள நிவாரண முகாம்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்றும் அளித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.