சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் காவிரி தண்ணீரை கடைமடைக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்பியதை கண்டித்தும், காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், பாசனவாய்க்கால்களை குடிமராமத்து பணிகளில் முழுமையாக தூர்வாரமல் ஊழல் முறைகேடு நடந்துள்ளதை தட்டிக்கேட்டு சிதம்பரம் பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து காட்டு மன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டப்படி, திங்கள்கிழமை(ஆக.27) விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாதவன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் காட்டு மன்னார்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரைக்கும் முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.பிறகு, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காட்டுமன்னார் கோவில் காவல் துறையினர் மறியல் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றனர். இதனால் போராட்டகாரர்களுக்கும் காவல் துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, விவசாயிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல் துறையினர் சங்கத் தலைவர்களை குற்றவாளிகளை போல் துரத்தி துரத்தி தடியடி தாக்குதல் நடத்தினர்.

சங்கத் தலைவர் மாதவன், பிரகாஷ் உள்ளிட்டோர் சட்டையை பிடித்து தரதரவென இழுத்தும் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இந்த தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் காவல் துறையினரை கண்டித்தும் போராட்டத்தை தொடர்ந்ததால் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அங்கு உண்ணாநிலை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத் துக்கு வந்த காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும், இனிஇதுபோன்ற சம்பவம் நடக்காது என்றும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் உண்ணாநிலை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.