தீக்கதிர்

காங்கயத்தில் கோவில் கலசம் கடத்தல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை

திருப்பூர்,
காங்கயம் பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் கலசம் கொள்ளை போனது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திங்களன்று விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்துள்ள அரசம்பாளையம் கிராமத்தில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவறையின் மேல் உள்ள கோபுரத்தில் இருந்த ஐம்பொன்னாலான பழமையான கோபுர கலசம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொள்ளை போனது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காங்கேயம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் கலசம் காணாமல் போனதற்கு சிலை கடத்தல் கும்பலின் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் திங்களன்று காலை முதல் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.