திருநெல்வேலி;
கடல் அலையை போன்று ஓயாத உழைப்பாளி கலைஞர் கருணாநிதி என நெல்லையில் நடைபெற்ற புகழ் வணக்கக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் திமுக சார்பில் புகழ் வணக்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. “அரசியல் ஆளுமை: கலைஞர்” என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பங்கேற்று கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
பன்முக ஆளுமைத் திறன் மிக்கவர் கலைஞர் கருணாநிதி. கடின உழைப்பினால் முன்னுக்கு வந்தவர். கடல் அலையைப் போன்ற உழைப்பாளி. தனது உழைப்பால் பல பொறுப்புகளைபெற்று அதை திறம்பட நிறைவேற்றியவர்.பல்வேறு தருணங்களில் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தவர். 1975இல் அவசர நிலை பிரகடனப்படுத்திய போது தமிழகத்தில் அதை அனுமதிக்க மாட்டோம் என்று துணிச்சலுடன் கூறியவர் கருணாநிதி. அவர் மறைந்தது திமுகவுக்கு மட்டும் அல்ல அனைவருக்குமே பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற பணிகளில் ஸ்டாலின் திறம்பட செயல்படுவார் என நம்புகிறோம். கலைஞர் கருணாநிதி போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து பாதுகாக்கும்.

பின்தங்கிய கிராமத்தில் அடித்தட்டு சமூகத்தில் பிறந்த அவர் தனது 14 வயதி லேயே பொதுவாழ்க்கைக்கு வந்தவர். தமிழகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தமிழர் பண்பாடு, மொழி, இடஒதுக்கீடு மதச்சார்பின்மையை பாதுகாக்க திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இணைந்து போராடும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில
இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், கொங்குநாடு மக்கள் கட்சி நிர்வாகி சூரியமூர்த்தி, பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், பொன்.குமார், சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம், செல்லமுத்து, தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப்,
அதிசயமான், பஷீர் அகமது, அம்மாசி, கிறிஸ்தவ நல்லிணக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக கூட்ட மேடையில் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கருணாநிதியின் படத்திற்கு கி.வீரமணி தலைமையில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, முன்னாள் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.