காசி:
உலகில் ‘பெண்ணியம்’ ஒழியவேண்டும் என்று, 150 ஆண்கள் ஒன்றுசேர்ந்து காசியிலுள்ள கங்கைக் கரையில் பூஜை நடத்தி, கோமாளித்தனம் செய்துள்ளனர்.

ஆணுக்குப் பெண் சமமானவள் அல்ல என்ற கோட்பாடு, மதங்களின் வழியாக, சமூக, பண்பாட்டு பழக்க வழக்கங்களின் வழியாக பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு இருந்தது. பெண் படிக்க முடியாது; தனியாக சிந்திக்க முடியாது; செயல்பட முடியாது; தனித்த விருப்பங்களை கொண்டிருக்கக் கூடாது; ஒரு பெண் என்பவள் ஆணின் உடமை மற்றும் பிள்ளை பெற்றுத்தருவதற்கு உரிய- ரத்தமும் சதையுமுள்ள ஒரு பொருள் மட்டுமே என்று கற்பிக்கப்பட்டு வந்தது. இன்றோ உயர்கல்வி, மருத்துவம், அறிவியல், அரசியல், பொருளாதாரம், இராணுவம், விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில துறைகளில் ஆண்களைக் காட்டிலும் திறமையில் விஞ்சி நிற்கிறார்கள். ஆனால், இது எளிதில் நடந்த விஷயமல்ல. இந்த உரிமையை அடைவதற்கு பெண்களும், அவர்களுக்கு தலைமை தாங்கிய பெண்ணியவாதிகளும் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.

ஆனால் இன்னும் சமூகத்தளத்தில் பெண்கள், ஆண்களுக்கு கீழாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர். அதை எதிர்த்து போராட்டங்களும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. பெண்களின் சமஉரிமைக்காக குரல் கொடுப்பவர்களும், சம வாய்ப்பு கேட்கும் பெண்களும் ‘பெமினிஸ்டுகள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ‘இந்திய குடும்பங்களை காப்பாற்றுவோம் இயக்கம்’ (Save Indian Family Foundation- SIFF) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த உலகில் இருந்து ‘பெமினிசத்தை’ அழிக்க வேண்டும் என்று யாகம் ஒன்றை நடத்தி கோமாளித்தனம் செய்துள்ளனர்.மனைவி கொடுத்த வன்கொடுமைப் புகாரால் பாதிக்கப்பட்டர் என்று கூறிக்கொண்டு, ராஜேஷ் வக்காரியா என்ற நபர்தான், இந்த ‘குடும்பங்களைக் காப்பாற்றுவோம்’ என்று இயக்கத்தை 2005-இல் தொடங்கியுள்ளார். அதன்பின்னர் கடந்த 13 ஆண்டுகளில் 4 ஆயிரம் பேர் இதில் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாகவும், இந்தியா முழுக்க 200-க்கும் அதிகமான அலுவலகங்கள் இதற்காக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

அனைத்துச் சட்டங்களும் பெண்களுக்கே ஆதரவாக உள்ளன; எனவே, அந்த சட்டங்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாம். வருடம் ஒருமுறை சூர்ப்பனகை உருவ பொம்மை செய்து, அதன் மூக்கை வெட்டும் நிகழ்ச்சி நடத்தும் அளவிற்கு பெண்கள் மீது வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த வன்மத்தின் ஒருபகுதியாகவே, மனைவியிடம் விவாகரத்து பெற்ற- இந்த அமைப்பைச் சேர்ந்த 150 ஆண்கள் சேர்ந்து, தங்களது பழைய திருமண தோஷம் போக வேண்டும் என்று, காசி கங்கைக் கரையில் பூஜை நடத்தி உள்ளனர். 150 ஆண்களும் ஒரே நேரத்தில் கங்கை ஆற்றில் இறங்கி, பெண்ணியவாதம் ஒழிய வேண்டும் என்று ஒரே குரலில் கோஷம் போட்டுள்ளனர். 100 முறை திரும்பத் திரும்ப கூவியுள்ளனர். கங்கைக் கரையில் நடந்த இந்த கோமாளித்தனம், சமூகவலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவி, சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு புறத்தில் வக்கரித்த ஆண்கள் இந்தியாவில் இன்னும் இருக்கிறார்கள் என்ற உண்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: