லக்னோ:
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் ‘தாரூல் கஸா’ எனப்படும் ஷரீயத் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இஸ்லாமியர்களின் ஷரீயத் முறைப்படி முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும், எனினும் இவை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கு இணையானவை அல்ல என்றும் கூறப்பட்டிருந்தது.இதற்கிடையே, ‘தாரூர் கஸா’வுக்கு போட்டியாக, மீரட் நகரில் ‘இந்து நீதிமன்றம்’ அமைத்த இந்து மகா சபை-யினர், இந்த நீதிமன்றம் தூக்குத்தண்டனை வரை வழங்கும் என்றதுடன், பிரதமரையும் தண்டிப்போம் என்றனர். இந்து மகா சபையின் தேசிய செயலாளரும், சாமியாரிணியுமான பூஜா சகுன் பாண்டே என்பவரை நீதிபதியாகவும் அறிவித்தனர்.

இதுதொடர்பான சர்ச்சைகள் ஓயாத நிலையில், அலிகார் நகருக்குச் சென்ற பூஜா பாண்டே, “மகாத்மா காந்தியை கோட்சே கொல்லாமல் விட்டிருந்தாலும், நான் அவரைக் கொன்றிருப்பேன்” என்று கூறினார். கோட்சே-வின் தியாகத்திற்காக பெருமைப்படுவதாகவும், அவரை வணங்குவதாகவும் பூஜா பாண்டே கூறினார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், கண்டனத்திற்கும் உள்ளானது.

இந்நிலையில்தான், ‘மதநல்லிணக்கத்திற்கு எதிராக, விஷ வார்த்தைகளை உதிர்த்த பூஜாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என்று சமாஜ்வாதி கட்சி நிர்வாகியான சுனில் யாதவ் தற்போது வலியுறுத்தியுள்ளார்.“2019 மக்களவைத் தேர்தலில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதாகவே, பூஜாவின் பேச்சு உள்ளது. இவரை ஒரு விநாடியும் தாமதிக்காமல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான விஜேயந்திர திரிபாதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து மகாசபை, சட்டத்திற்கு விரோதமாக அமைத்துள்ள “இந்து நீதிமன்றம்’ குறித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏற்னெவே பொதுநல வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.