கோவை,
விவசாயிகளின் தற்கொலையைதடுத்து நிறுத்த அனைத்து விதமான விவசாய கடன்களில் இருந்தும் விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கோவை மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. இதனை தடுத்திட விவசாய தொழிலாளிகளின் அனைத்து கடன்களையும் விடுவிக்க வேண்டும். உழுபவனுக்கே நிலம் சொந்தமாக்க நிலச்சீர்திருத்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.2 ஆயிரம் கோடியைப் பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நூறுநாள் வேலை உறுதித்திட்டத்தில் வேலை நாட்களை அதிகப்படுத்தவும், கூலியை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இக்கோரிக்கைகளை மத்திய அரசு மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திங்களன்று பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை கோவை மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் வழங்கினர். இதனை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆட்சியரை சந்தித்து நேரில் வழங்கினர்.

சேலம்
இதேபோல், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, அன்பழகன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் ரோகினியிடம் வழங்கினர். இம்மனுவினை அளிக்க சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.