வரலாறு காணாத கனமழையால் ஒட்டு மொத்த கேரளமும் சிதைந்து இருக்கும் சூழ்நிலையில் சொந்த வீடுகளையும் பொருட்களையும் விவசாய நிலங்களையும் இழந்து தவித்துகொண்டிருக்கும் கேரள மக்களுக்கு உலகம் முழுவதுமிருந்து உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள் மக்கள். அதை முறையாக பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு வந்துகொண்டிருக்கும் நிவாரணப் பொருட்களை முறையாகவும் நேர்த்தியாகவும் விநியோகித்து தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு. கடுமையாக பாதிக்கப்பட்ட இடுக்கி மாவட்டமக்களுக்கு தேனி மாவட்டத்திலிருந்து மூன்றாம் கட்ட நிவாரணமாக அறம் அறக்கட்டளையோடு இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரப்பொருட்களை எடுத்து கொண்டு இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பாரத்தோடு கிராமத்திற்கு அருகே வசிக்கும் மழைவாழ் மக்களுக்கு உள்ளூர் தோழர்களோடு இணைந்து விநியோகம் செய்த அனுபவம் நெகிழ்வானது.

எங்களோடு இணைந்து வழிகாட்டிக் கொண்டிருந்த அந்தப் பகுதியின் பஞ்சாயத்து உறுப்பினர் தோழர் சோமனுடன் ஒரு வீட்டிற்கு சென்றோம். அந்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை. வீட்டில் சிதிலமடைந்த பொருட்களையெல்லாம் முறைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்தவுடன்,“ஆ, சோமன் சேட்டா வா வா வா” என்று வரவேற்றனர். அவரின் பின்னாலே வந்த அந்தப் பகுதி தோழர் தாஸ் அவர்களை, “ஆ தாஸ் சகாவே” என்று கட்டி அணைத்து கைகளை இறுக்கி பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் அந்தக் குடும்பத்தின் தலைவர். யார் இந்தக் குடும்பம் என்பதுதான் முக்கியமானது. அந்தக் குடும்பத் தலைவரின் பெயரும் தாஸ். இவர் நாற்பது ஆண்டு காலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர தொண்டர். தற்போது இடுக்கி மாவட்டம் பாரத்தோடு கிராமத்திற்கு அருகே உள்ள 40 ஏக்கர் சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி, தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களது சொந்த மாவட்டமான கண்ணூரில் இருந்து, பாபர்மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கு செங்கல் கற்களை எடுத்துச் செல்லும் குழுவில் இடம்பெற்ற தீவிர இந்துத்துவா செயற்பாட்டாளர். இப்போது வசிக்கும் பகுதியில் மற்ற மதத்தினர் யாராக இருந்தாலும் பேசமாட்டாராம்.

ஒரு முறை கடைவீதியில் மீன் வாங்கிக் கொண்டிருந்த போது, என்ன தாஸ் நல்லா இருக்கீங்களா என்று கூறி ஒரு தோழர் அவர் தோளில் கைபோட்ட போது, சட்டென்று கோபம்கொண்டு, கம்யூனிஸ்ட்டுகளின் கை என்மீது படக்கூடாது என்று சொன்னாராம். தற்போது ஏற்பட்ட கனமழை – வெள்ளத்தில்வீடு முழுவதையும் இழந்து தவித்த சூழ்நிலையிலும் கூட; தோழர்கள் அவரிடம் சென்று பாதுகாப்பாக இருக்க முகாமிற்கு அழைத்த போதும் கூட கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் எனக்கு எந்த உதவியும் தேவையில்லை என்று கூறியும், முகாம் அமைத்த பகுதி ஒரு தேவாலயம் என்பதால் வரவும் மறுத்திருக்கிறார். இருந்த போதிலும் அவரோடு மனைவியும் பெண்குழந்தையும் கஷ்டப்படுவதை கண்டு மனம் தாங்காத தோழர்கள், காவல்துறை அதிகாரிகளிடம் பேசி விடாப்படியாக அழைத்து முகாமில் தங்கவைத்துள்ளனர். மூன்று நாட்கள் முகாமில் தங்கியிருந்த போது, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் கவனம் செலுத்தியதியாகப்பூர்வமான தோழமைகளின் பணியைக் கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார். மூன்று நேரம் உணவு, புதிய மாற்றுத் துணிகள், பெட்ஷீட்கள், மருந்து பொருட்கள் என அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து சேர்த்த தோழர்களிடம் அருகே சென்று பேச ஆரம்பித்துள்ளார்.

“இவ்வளவு கடினமான பணிகளை இரவும் பகலும் எப்படி செய்கிறீர்கள்; அனைத்து மக்களையும் அன்போடு கவனித்து அவர்களின் தேவையறிந்து பொருள்களை கொண்டுவருவது என்னை வியக்க வைக்கிறது; உங்களை நான் வேறமாதிரி நினைத்து இருந்தேன்; ஆனால்உங்கள் பணி வேறமாதிரியாக இருக்கிறது” என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்.மழை – வெள்ளத்தால் வீட்டை இழந்து, உடுத்த மாற்றுத் துணிகூட இல்லாத இவருக்குஉடும்பன்சோலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு வீடு ஒன்றைக் கொடுத்து அந்த வீட்டிற்குதேவையான அனைத்து பொருட்களையும் சேக
ரித்துக் கொடுத்து கருவறையில் இருக்கும் குழந்தையைப் போல் பாதுகாத்ததால் கண்ணீரோடு சொல்கிறார்; “கம்யூனிஸ்ட்களை நான் வேற மாதிரி நினைத்தேன். ஆனால் நீங்கள் மக்கள் மீது பேரன்பு கொண்டவர்களாக இருக்கிறீர்கள்; இனி உங்களோடு தான் என் பயணம்” என்று கைகளை இறுக்கி சொல்லி இருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கைப்பட்டால் தீட்டு என்று நினைத்த அவரின் கையைப் பிடித்துச் சொன் னோம்; இங்க மட்டுமில்லை, உலகத்தில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் சாதி, மதம், இனம் கடந்துமனிதனை மனிதன் மதிக்கும் கொள்கையோடு பாதிக்கப்பட்ட மக்களோடு துணை நிற்போம்; உங்களோடும் நிற்போம்; தைரியமாக இருங்கள் என்று கூறி விடைபெற்றோம்.

கட்டுரையாளர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேனி மாவட்டச் செயலாளர்

Leave a Reply

You must be logged in to post a comment.