கொல்கத்தா,
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், பாஜக அல்லாத கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து போராட வேண்டும். பிரச்சனைகளை விமர்சித்து, வலது சாரி அமைப்புகளைத் தேவைப்பட்டால் எதிர்க்க வேண்டும். சமத்துவத்துக்கு மிகப்பெரிய ஆபத்து, அச்சுறுத்தல் இருக்கும் போது, போரிட வந்துவிட்டால், நாம் கண்டிப்பாக பின்வாங்கக்கூடாது. 2014-ம் ஆண்டு தேர்தலில் ஒரு கட்சிக்கு 55 சதவீத வாக்குகள் கிடைத்தது. அந்தக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை, ஆனால், 35 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. சர்வாதிகாரத்தைத் தடுத்து நிறுத்தி, சமத்துவத்தின் விதைகளை விதைக்க வேண்டும். ஆபத்தில் இருந்து ஜனநாயகத்தை மக்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்.  தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டத்துக்கு எதிராக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அந்த மாணவர்கள் மீது எந்தவிதமான குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. சட்டவிரோதமான செயல் எப்படி நடந்தது என்பதை அனைவரும் பார்த்தோம்.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், நாளை மக்கள் மீது நடத்தப்படலாம். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், பாஜக அல்லாத கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.