திருநெல்வேலி,
லஞ்ச ஊழல் புகார் விசாரணை முடியும்வரை முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார் . நெல்லையில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக கூறி சிபிசிஐடி. போலீசார் ஆவணம் தாக்கல் செய்துள்ள‌னர். இதில் நிர்மலாதேவி வாக்குமூலம் அளித்ததாகக் கூறுவது நம்பும்படி யாக இல்லை.

சிபிஐ விசாரணை தேவை:
உண்மையை மூடி மறைக்க தமிழக அரசும், சிபிசிஐடியும் முயல்கிறது. இதை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கக்கூடாது. ஏற்கனவே நிர்மலாதேவி பேசியதாகக் கூறப்பட்ட ஆடியோவில் ஆளுநர் உள்ளிட் டோர் பற்றியும் அவரது பேச்சுகள் இடம் பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடரத் தயாராக உள்ளது. நிர்மலா தேவி விவகாரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.  தமிழக முதல்வர் மீதும், துணை முதல்வர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்துவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள். முதல்வர் மீதான குற்றச் சாட்டை அவருக்கு கீழ் செயல்படும் காவல் துறை விசாரணை நடத்துவது சரியாக இருக்காது.

பணிநீக்கம் செய்ய வேண்டும்:
ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரி மீது தான் பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் கூறினார். புகார் கூறியவரை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார்கள். எனவே அந்த உயர் அதிகாரி எப்படி முதல்வர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும். இந்த விவகாரத்தில் ஒருவரையொருவர் காப்பாற்றவே முயற்சிக்கிறார்கள்.லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும். தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் சரியாக இல்லை. பழமையான முக்கொம்பு அணை உடைந்ததற்கு கடுமையான மணல் கொள்ளை மற்றும் அணையை பராமரிக்காததே காரணமாகும். தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் வீணாககடலில் கலக்கிறது.

ஆனாலும் 1,300 குளங்கள்வறண்டு கிடக்கின்றன. காவிரியில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. எனவே உயர்மட்ட‌அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அணை களையும் மாற்றி கட்டுவதற்கு பெரிய திட்டம்தீட்ட வேண்டும். ஆற்று மணல் அள்ள தடைநிரந்தரமாக விதிக்க வேண்டும். கூடங்குளம் அணு மின்நிலையத்தில் ஏற்கெனவே இருஅணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு கூடுதல் அணு உலை அமைக்கக் கூடாது. அணு உலை பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில்பேச்சு, எழுத்து சுதந்திரம் பறிக்கப் பட்டுள்ளது. தூதுத்துக்குடி துப்பாக்கி சூடுகுறித்து பேசினாலும், 8 வழிச்சாலை குறித்துபேசினாலும் வழக்குப் போடுகிறார்கள். இதை கண்டித்து அடுத்த மாதம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும்.

கருத்துரிமை மாநாடு
சென்னையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி பேச்சுரிமை, எழுத்துரிமைக்கான கருத்தரங்கு நடத்தப்படும். இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொள்கிறார். தூத்துக்குடியில் போராடி யவர்கள் மீது மீது துப்பாக்கிச் சூடு நடத்தி யதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என முதன் முதலில் வலியுறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்த லில் யாருடன் கூட்டணி வைப்பது என்று தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கப்படும். அதில் யார் யாரெல்லாம் இணைவர் என்பது பின்னர் தெரியவரும். அகில இந்திய அளவில் ஒரே அணி அமையாது. மாநிலத் துக்கு மாநிலம் வேறுபட்ட அரசியல் உள்ளது. 3ஆவது அணி அமைந்தால் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அமையும். எனவே 3வது அணி தேவையில்லாதது. தமிழகத்தை பொறுத்த வரை பாரதிய ஜனதா மீது மக்களின் எதிர்ப்பு உணர்வு தான் உள்ளது இந்த கட்சி இங்கு எடுபடாது. பாரதிய ஜனதாவையும், அ.தி.மு.க.வையும் வீழ்த்த அரசியல் உத்திகளை வகுத்து வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் வீ.பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.