பத்து வயதில் நான் வீணையும் மிருதங்கமும் பயிற்சி செய்து பாராட்டுகளையும் பெற்றதாக சொன்னேன் அல்லவா? அதற்கு ஒரு பரிசு வழங்க வேண்டும் என்று எனது அப்பா நினைத்தாரோ என்னவோ , எச்.எம்.வி என்கிற நிறுவனத்தின் பியஸ்டர் ரெக்கார்டு பிளேயரை வாங்கித்தந்தார்.

இது சினிமா பாடல்கள் கேட்கப் பயன்படும். வட்ட வடிவில் தட்டு போன்று இருக்கும். இதன் நடுவே கொண்டை ஆணியைப்போல் ஒரு பகுதி இருக்கும். அதில் சினிமா பாடல்கள் பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டினைப் பொருத்த வேண்டும். அந்தப் பிளேயரின் ஓரத்தில் நெகிழ்வுத்தன்மை கொண்ட உலோகத்தாலான ஒரு கருவி இருக்கும். அதற்குக் காரணம் ஒரு ஓரத்தில் வைக்கப்படுகிற ஊசி மெல்ல மெல்ல நகர்ந்து அதனுடைய இறுதிக்குச் செல்ல வேண்டும் என்பது தான். அந்தக் கருவியின் முனையில் ஊசி ஒன்றை செருகி இசைத்தட்டின் மீது வைத்து கையால் விசையை முடுக்கிவிட்டால் – முன்பெல்லாம் கார், பஸ் போன்றவற்றை இஸட் வடிவிலான இரும்புத் தடியைக்கொண்டு சுழற்றுவார்களே அதுபோல முடுக்கிவிட்டால் – இசைத்தட்டு சுழன்று சுழன்று வரும். ஏற்கெனவே பொருத்தப்பட்ட ஊசிமுனை ஏற்ற இறக்கத்தோடு அதன்மீது ஊர்ந்து செல்லும்போது அதற்கேற்ப இசையும் பாடலும் ஒலிக்கும்.  ஒரு இசைத் தட்டில் நான்கு பாடல்கள், ஆறு பாடல்கள், எல்லாம் இருக்கும். இசைத்தட்டில் ஒவ்வொரு பாடலையும் பிரித்துக் காட்ட இடையிடையே சின்ன இடைவெளி இருக்கும். அந்தப் பிளேயரைப் பயன்படுத்துகின்றவர் மிகச்சரியாக அந்த இடத்தைக் கண்டறிந்து ஒரு பாடல் வேண்டாம் என்றால் அதை விடுத்து இன்னொரு பாடல் தொடங்கும் இடத்தில் ஊசியைப் பொருத்துவார். இந்த இசைத்தட்டுகளில் 78 , 45 – என வேகம் குறிக்கப்பட்டிருக்கும். அதற்கேற்ப விசையை செலுத்த வேண்டும். ஊசி சாதாரணமாக இருந்தால் அவ்வப்போது எடுத்து எறிந்துவிட்டு புதிய ஊசியைப் பொருத்திப் பயன்படுத்த வேண்டும்.

கூர் முனை மழுங்கிப் போன பிறகும் பயன்படுத்தினால் இசைத்தட்டு வீணாகிவிடும். கீறல் விழுந்து அங்கேயே நின்று பாடியதையே திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருக்கும். சில நேரங்களில் சிலர் பேசுகிறபோது “என்ன கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி பேசியதையே பேசுகிறார் ” என்று கிண்டலாக சொல்வதுண்டு. இந்தப்பழக்கம் இசைத்தட்டு காலத்திலிருந்து வந்ததுதான். அதற்காக சாதாரண ஊசியைப் பயன்படுத்தாமல் நீண்டநாள் உழைக்கிற மிகவும் நுட்பமான அதே நேரத்தில் வலுவான வைர ஊசியைப் பயன்படுத்தலாம்.  இப்படிப்பட்ட இசைத்தட்டுகளையும் ஊசியையும் நெல்லையில் எச்.எம்.வி. திரு. மணி ஐயர் கடையில் வாங்குவேன். ஒவ்வொரு திரைப்படம் வெளியானதும் கால்கள் நேராக மணி ஐயர் கடையைத் தேடி ஓடும். இசைத்தட்டுகளை வாங்கி வந்து பாடல்கள் கேட்பதும் அவற்றிலுள்ள இசை நுணுக்கங்களை அறிந்து கொள்வதும் எனக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாக மாறியது .

சினிமா பாடல் மோகம் காரணமாகதிரை இசை மேதை திரு. சி.ஆர். சுப்புராமன் அவர்களும் அவரின் மகன் திரு. சி.எஸ்.கண்ணன் அவர்களும் நெல்லை பாடகர் திரு.வாசு அவர்களும் சேர்ந்து நடத்தி வந்த சத்யசாயி இசைக்குழு என்னை இழுத்தது. 20 இசைக்கலைஞர்களுடன் எனது வீட்டிற்கு அடுத்தாற்போல் அவர்கள் பயிற்சி செய்தார்கள். நானும் அங்கே சென்று அமர்ந்து பேங்கோஸ் வாசிக்க முயற்சி செய்தேன். திரு.தர்மா அவர்களும் திரு.கணபதி அவர்களும் எனக்கு பேங்கோஸ் இசைக்க ஏற்கெனவே பயிற்சி கொடுத்திருந்தனர். அத்தோடு நிற்காமல் காங்கோ, ட்ரம்ஸ் என்று ஏகத்திற்கும் இசைக்கருவிகளில் எகிறி எகிறி பயிற்சி செய்தேன். மறுபடியும் அப்பா குறுக்கே வந்தார். அவர் என்ன சொன்னார்? என்ன செய்தார் ? நான் எங்கே சென்றேன்? என்ன மாற்றம் ஏற்பட்டது? அடுத்த வாரம் சொல்கிறேன்……

– ஐனரஞ்சன்

Leave a Reply

You must be logged in to post a comment.