தாராளமயமாதல், உலகமயமாதல், தனியார்மயமாதல் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய அனைத்தும் தனியாருக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சாலைகள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்க கட்டணம் வசூலிப்பது என்பதாகும். இந்த சுங்க கட்டணமானது சாலைகளை பராமரிப்பதற்காவும், சாலையோரம் கழிப்பிடம் கட்டுவதற்காவும், அவசர தொலைபேசி நிலையங்கள் அமைப்பதற்காகவும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இன்னமும் பல தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும், குழியுமாகவே காட்சியளிக்கிறது.

இதேபோல் கட்டப்பட்ட கழிப்பிடங்களில் பல பூட்டிய நிலையிலும், பராமரிப்பின்றியும் உள்ளது. முன்னதாக, மறைந்த பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் கடந்த1998 ஆம் ஆண்டு காலத்தில்தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை என்ற பெயரில் நிலங்கள் அனைத்தும் கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு அதிவேக சாலைகள் போடப்பட்டது. அவ்வாறு நிலத்தை பறிகொடுத்த நில உரிமையாளர்கள் பலருக்கும் இன்றுவரை உரிய பணம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அந்த கால கட்டத்தில்தான் முதன்முதலாய் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 462 சுங்கச் சாவடிகளும், தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச்சாவடிகளும் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் தான் வரும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து கட்டணத்தை உயர்த்த காத்திருக்கின்றன. இதுகுறித்து கால்டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்ததாவது, தற்போதைய சூழ்நிலையில் வாடகை வாகனங்களை இயக்குவதே மிகவும் சிரமமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுவும் தற்போது பெட்ரோல் விலை 80 ரூபாயையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும், எப்.சி இன்சுரன்ஸ் கட்டணமும் அதிகரிப்பதால் ஏற்கனவே வண்டி வாடகைஅதிகமாக உள்ளது என குற்றம்சாட்டுகின்றனர். இந்த சூழலில் சுங்கக்கட்டணமும் அதிகரித்தால் வாகங்களை விற்றுவிட்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டியது தான் என வருத்தம் தெரிவித்தனர் அன்றாட வியாபாரிகள் தெரிவித்ததாவது: எங்களை போன்ற வியாபாரிகள் தினமும் பெங்களூர், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை எடுத்து வருகிறோம். ஏற்கனவே பெட்ரோல் விலை அதிகரிப்பால் பொருட்களின் விலையும் அதிகமாகி உள்ளது.

தற்போது சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரிப்பதால் வியாபாரிகளையும், பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கும். மேலும், வாகனங்கள் வாங்கும்போதே சாலை வரி என்ற பெயரில் வரி வசூலிக்கப்படுகிறது. பின்னர் தனியாக சாலைக்கான சுங்ககட்டணம் எதற்கு? ஆகவே, தனித்தனியாக கட்டணம் பெறும் இந்த முறையானது முற்றிலும் சுரண்டும் செயல்தான். எனவே இந்த கட்டண உயர்வை நிறுத்த வேண்டும். அதேபோல், சுங்கச்சாவடிகள் அனைத்தையும் நீக்கி விட்டு அரசே சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

– அரவிந்தன் சக்திவேல்.

Leave A Reply

%d bloggers like this: