கேரள மாநிலத்தை சூறையாடிய பெரு வெள்ளத்தின் நீர் வடிந்த பின், ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவை முழுமையாக இல்லாவிடினும் ஓரளவிற்காவது மதிப்பீடு செய்திட இயலும். மேலும், ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு எதிர்காலத்தை திட்டமிட இயலும்.

ஏற்பட்டுள்ள பேரிழப்புகள்:
1924ஆம் ஆண்டிற்குப் பிறகான காலத்தில் வெள்ளத்தால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான சேதம் இதுவாகும். கிட்டத்தட்ட 300 மதிப்புமிக்க உயிர்களை இழந்துள்ளோம். இன்னமும் 32 பேரைக் காணவில்லை. பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை தவிடு பொடி யாக்கி பெருஞ்சீற்றத்துடன் ஆறுகளின் நீர் பாய்ந்து பெருக்கெடுத்து ஓடியதை நாம் பார்த்தோம்.  வெள்ளத்தில் சிக்குண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின், நிவாரண முகாம்களில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் நிலைமையை நாம் பார்த்தோம். அவர்களது சோகம், கடுந்துன்பம் மற்றும் அச்சம் நமது வீடுகளுக்குள்ளும் பரவின.

நிவாரணப் பணிகள்:
ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, பலரும் தங்களது சொந்த உயிரைப் பணயம் வைத்து உயிர்களை காத்திடும் தீரம் மிகுந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதை அனைவரும் கண்டோம்.  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் துவங்கிய பின்னர், வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்குண்ட மக்களை மீட்பதிலும், அவர்களுக்கான நிவாரண முகாம்களை ஏற்படுத்துவதிலும், அவற்றை இயக்குவதிலுமே அரசின் முக்கியமான கவனம் இருந்தது.  ஆகஸ்ட் 17 முதல் 19 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக கனமழை பெய்தபோது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 3,274 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்றைக்கும் கூட பல லட்சக்கணக்கான மக்களால் தங்களது வீடுகளுக்கு திரும்ப இயலவில்லை. சில இடங்களில் அவர்கள் தங்களது வீடுகளை இழந்தவர்களாக உள்ளனர். வேறு சில இடங்களில், அவர்களது வீடுகள் மீண்டும் வசிக்க இயலாதபடி சேதமடைந் துள்ளன அல்லது தற்போது குடியிருக்க லாயக்கற்றவையாகவும், பல நாட்களுக்கு சுத்தம் செய்ய வேண்டி யவையாகவும் உள்ளன. எனவே, பெரும் தேவைகளு டன் நிவாரண முகாம்கள் தொடர வேண்டி உள்ளது.

மாநில அரசின் முன்னுள்ள சவால்கள்:
ஆரம்ப கட்டமாக ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு 20,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள நிலை யில், இதைவிடக் கூடுதலாகவே சேதத்தின் அளவு இருக்கும் என கேரள அரசு கணிந்துள்ளது. தொற்று நோய்கள் பரவாது தடுப்பது, சுத்தமான குடிநீரை உத்தரவாதம் செய்து, மின்சார விநியோகத்தை மீண்டும் ஏற்படுத்துவது, தகவல் பரிமாற்றத்தை மீண்டும் ஏற்படுத்துவது, லட்சக் கணக்கான வீடுகளை மீண்டும் கட்டுவது, சாலைகளை ஏற்படுத்துவது, பாலங்களைச் செப்பனிடுவது அல்லது மறுகட்டுமானம் செய்வது போன்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சவால்களை அம்மாநில அரசு பட்டியலிட்டுள்ளது.  உடனடி நிவாரணமாக 2600 கோடி ரூபாய் ஒதுக்கிடுமாறு மத்திய அரசை அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பண உதவியாக 600 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை மத்திய அரசு அளித்துள்ளது. சந்தையிலிருந்து நிதியை திரட்டிட மாநில அரசை அனுமதிக்கும் வகையில் தொடர்ச்சியான கொள்கை முடிவுகளையும் மத்திய அரசிடம் அம்மாநில அரசு கோரியுள்ளது. “புதிய கேரளத்தை” கட்டமைப்பது என்ற கண்ணோட்டத்தை கேரள அரசு முன்வைத்துள்ளது.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:
கேரளா எதிர்கொண்ட நிலைமை என்பது இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்றாகும். ஆனால், இத்தகைய பேரழிவை கேரள மாநில அரசும், அம்மாநில மக்களும் எதிர்கொண்ட விதம் நாட்டின் இதர பகுதியினருக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கவனமான அரசியல் உறுதி மற்றும் மதிநுட்பத்துடன் கூடிய நிர்வாகத் திறன், பாகுபாடுகள் எதுவும் இல்லா மல் எழுந்துள்ள பல்வேறு சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கான திறன் ஆகியவற்றின் தேவையை முதல் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.  பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளன. மேலும், “சமீப காலத்தில் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணி மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள்” என விவரிக்கப்பட்டுள்ளன.

நெருக்கடி மிகுந்த காலத்திலும் களத்தில் உள்ள யதார்த்த நிலை குறித்த துல்லியமான தகவல்கள் மற்றும் விவரங்களுடன், சில சமயங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட, முதலமைச்சரே நேரடியாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புகள் மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தின. மேலும், பேரழி வால் ஏற்பட்ட அச்ச உணர்வைப் போக்கிட உதவின. தனது நேரடி மேற்பார்வையின் கீழ் ஒட்டுமொத்த பணிகளையும் முதல்வர் பினராயி விஜயன் ஒருங்கிணைத்தார். எதையும் மிகைப்படுத்திக் கூறுவது மற்றும் தற்பெருமை பேசுவது அல்லது தனது தோல்வியை மூடி மறைத்திட பிறர் மீது பழி சுமத்துவது போன்ற பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களுக்கு இது ஓர் பாடமாகும். நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட திறனும், அனுபவமும் கொண்ட ராணுவத்தின் மீட்புப் படையினரின் உதவியைக் கோரி மத்திய அரசை மாநில அரசு அணுகியது. அதன்படி, மத்திய அரசும் அவர்களை அனுப்பி வைத்தது.

மாநில சிவில் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டதால் மீட்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவது உத்தரவாதம் செய்யப்பட்டது. மீட்புப் படையினரின் அற்புதமான பணி மாநில அரசால் வெகுவாக பாராட்டப்பட்டது. இவ்வாறாக, மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடோ அல்லது தவறான புரிதல்களோ ஏற்பட்டு மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்படுகிற நிலையே இல்லாமல் தவிர்க்கப்பட்டது. இதுவும் ஓர் பாடமாகும். தகவல் பரிமாற்றத்திலும், முடிவுகளை எட்டச் செய்வதிலும் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அனைத்துப் பிரிவினரையும் இதில் ஈடுபடுத்திட கேரள அரசு முயற்சிகளை மேற்கொண்டது. ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளத்திற்கு வருகை புரிந்து வான்வழியே சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, மாநில முதலமைச்சருடன் எதிர்க்கட்சித் தலைவரையும் வரும்படி அழைப்பு விடுத்த மாண்பை வெளிப்படுத்திய ஒரே மாநில அரசு நிச்சயமாக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு மட்டும்தான்.

வேறுபட்ட கோட்பாடுகளைக் கொண்ட அரசியல் சூழல் கேரளத்தில் நிலவுகிற போதிலும், கேரளத்தை யும், அதன் மக்களையும் பாதுகாப்பதே அனைத்து அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட கருத்தாக இருக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருந்தது; அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் தேவை என்கிற வலுவான செய்தியை மேற்கூறிய நடவடிக்கைகள் அளித்தன. இக்கட்டான நெருக்கடி மிகுந்த சூழலிலும் அடிக்கடி எந்த உதவியையும் அளித்திடாத கூற்றுக்களை சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்டபோதும், எதிர்க்கட்சியையும் இணைத்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கை என்பது கேரள மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஏறத்தாழ மறு நிர்மாணம் செய்திடுவதில் உள்ள மிகப் பெரும் சவால்களை எதிர்கொள்வதற்கான தனது திட்டங்களில், சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திட அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன் வாயிலாக, இத்தகைய முடிவுகளை எடுப்பதில் அனைத்துக் கட்சிகளிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயக பங்கேற்பை உறுதி செய்கிறது.  “எதிர்க்கட்சிகளே இல்லாத” அரசியலை விரும்புபவர்களுக்கு இது மீண்டும் ஓர் அனுபவப் பாடமாகும்.

முன்னெழும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்:
வெள்ளப் பெருக்கின் பின்புலத்தில், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான மற்றும் தன்னுணர்வுள்ள கொள்கைகளுக்கான அவசியம் குறித்து நியாயமான கேள்விகள் எழுப்பப்பட்டன. பத்தாண்டுகளுக்கும் மேலாக சுற்றுச் சூழல் ரீதியாக முக்கியமான பகுதிகள் பொறுப்பின்றி அழிக்கப்பட்டதே இத்தகைய பேரிடருக்குக் காரணம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. விவாதிக்கத்தக்க, விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் வளர்ச்சி மாதிரியுடனான அதன் தொடர்பு ஆகியவற்றை நாம் புறந்தள்ள இயலாது. கேரளத்தை மறுநிர் மாணம் செய்வது என்ற கண்ணோட்டத்தில் எதிர்காலத் திட்டங்களைத் தீட்டும்போது இப்பிரச்சனைகளை எல்லாம் மாநில அரசு கவனத்தில் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கேரள மக்களாலேயே மிக முக்கியமான பாடம் இந்த தேசத்திற்குப் புகட்டப்பட்டுள்ளது. பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு சேவை செய்வதில் அம்மாநி லத்தின் கதாநாயகர்கள், இளைய மற்றும் முதிர்ந்த தன்னலம் கருதாத ஆர்வலர்களின் அளப்பரிய தியாகத்தில், சாதி மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து கூட்டாக, சமூகப் பணியை மேற்கொள்வது என்ற மிகநீண்ட காலமாக கேரளத்தில் இருந்து வரும் பாரம்பரியமும், கலாச்சாரமும் முன்னுக்கு வந்தன. தங்களது சொந்த படகுகளைக் கொண்டு, கனத்த மழையிலும், சீற்றத்துடன் பாய்ந்த வெள்ள நீரிலும் தங்களது உயிரைப் பணயம் வைத்து சக மனிதனின் உயிரைக் காப்பாற்றிய ஆயிரக்கணக்கான மீனவர்களின் தலைமையில் மனமுவந்து மேற் கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளால் உள்ளம் உரு கிடாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா?

உடல் கட்டுறுதியுடனான மீனவர் தரையில் மண்டியிட்டு வளைந்து படுத்து தங்களது முதுகை படிக்கட்டாகப் பயன்படுத்தி தன்னை மீட்க வந்த படகில் ஏறிட வயது முதிர்ந்த பெண்மணிக்கு உதவிடுவதைக் காட்டிய புகைப்படம் அவர்களது வீரத்தையும் துணிவையும் குறிப்பிடுவதாக இருந்தது. இத்தகைய தலைசிறந்த பணிக்காக அவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இம்மீனவர்கள் அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள். ஆனால், அவர்களது மீட்புப் பணியின்போது ஒருபோதும் அது ஒரு காரணியாக முன்னுக்கு வரவில்லை. கேரள மக்களின் இத்தகைய இக்கட்டான, துயரமான, அதிர்ச்சியளிக்கும் தருணத்தில், கேரளத்தவர்களாக அவர்கள் ஆத்மார்த்தமாக வெளிப்படுத்திய மனநிலை, உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதொரு பாடமாகும்.

துயரிலும் வெறுப்பை விதைத்த காவிக்கும்பல்:
கேரள மாநிலத்திற்கு உதவியை விரைந்து அளித்திட தனிநபர்களும், அமைப்புகளும் தன்னெழுச்சியாக மேற்கொண்ட முயற்சிகளில் பரிவும் ஆதரவும் பிரதிபலித்தன. இவ்வாறாக ஒட்டுமொத்த தேசமும் பேரிடருக்கு எதிர்வினையாற்றிய தருணத்தில், அரசியல் தளத்தில் உள்ள ஒரு சிலர் தங்களது பிரிவினைவாத அரசியலை தொடர்ந்து நடத்திட விரும்பியது, ஒவ்வொருவரது மனதிலும் திகைப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை யாக நிதியை அனுப்ப வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கிற வெறுப்பு நிறைந்த செய்தியை சங் பரிவாரத்தின் உறுப்பினர்கள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த நிதி சிறுபான்மை யினருக்கு பயன்படுத்தப்படுமே அன்றி இந்துக்களுக்கு பயன்படுத்தப்படாது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். கேரளத்தில் பெருஞ்செல்வந்தர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் தேவைப்படாது எனச் சொல்கிற முற்றிலும் தவறான, மோசமான செய்தியை பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் பதிவேற்றம் செய்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநரகத்தின் உறுப்பினராகப் புதிதாக நியமிக்கப்பட்ட, சங் பரிவாரத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்ட நபர், சபரிமலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு காரணமாக கேரளத்தின் மீது கடவுள் கடுஞ்சீற்றம் கொண்டதாலேயே இப்பேரழிவு ஏற்பட்டதாக ‘டுவிட்டரில்’ பதிவு செய்தார். இத்தகைய பதிவுகளுக்கு பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் எந்தவொரு தலைவரும் மறுப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை. கடுந்துயரத்தில் மக்கள் அல்லலுற்று இருக்கும்போது இத்தகைய நச்சுத்தனம் கொண்ட மோசமான செய்திகள் பதிவு செய்யப்பட்டது என்பது முழுமையான காட்டுமிராண்டித்தனத்தையே பிரதிபலிக்கிறது. இத்தகைய கீழ்த்தரமான அரசியலின் தாக்கம் எதுவும் மத்திய அரசில் இருக்காது என்றும், அதற்குப் பதிலாக கூட்டாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடித்து கேரள மாநிலத்தை மறுநிர்மாணம் செய்திடத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

நன்றி : என்டிடிவி.காம்
தமிழில் : ராகினி

Leave a Reply

You must be logged in to post a comment.