கோவை,
கோவை சிங்காநல்லூரிலுள்ள உழவர் சந்தை நிர்வாகத்தின் தொடர் குளறுபடிகளை கண்டித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள உழவர் சந்தையில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இச்சூழலில் உழவர் சந்தை நிர்வாகம் வியாபாரிகளின் ஆதிக்கத்திற்கு அடிபணிவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள் அளித்த புகாரின்பேரில் விவசாயிகளின் அடையாள அட்டையை உழவர் சந்தை நிர்வாகம் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் ஞாயிறன்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து சிங்காநல்லூர் உழவர் சந்தை விவசாயிகள் கூறுகையில், நாங்கள் விளைவித்த பொருட்களை நேரிடையாக மக்களிடம் விற்பதற்காக உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இங்கு அதன் நோக்கத்தை சீரழித்து வருகிறார்கள். இங்கு விவசாயிகளின் போர்வையில் ஏராளமான வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. மாறாக, உழவர் சந்தை நிர்வாகம் பணம் பார்ப்பதில் மட்டுமே குறியாக உள்ளது.

குறிப்பாக, எங்களின் பயன்பாட்டிற்கான குளிர்பதனகிடங்கை விவசாயி அல்லாதவருக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இப்படி அடுத்தடுத்து நடைபெறும் அத்துமீறல் குறித்து முறையிட்டதால் தற்போது வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் உண்மையான விவசாயிகளின் அடையாள அட்டையை உழவர் சந்தை நிர்வாகம் பறித்து வைத்துக் கொண்டுள்ளது. ஆகவே, எங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இப்போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: