கோயம்புத்தூர்,
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை மடக்கி பிடித்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியரின் மகன் கத்திகுத்தில் படுகாயமடைந்தார்.

கோவை சுங்கம் பகுதியில் தியாகி சிவராம் நகர் உள்ளது. இப்பகுதியில் சமீப காலமாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அப்பகுதியிலுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும், தீக்கதிர் கோவை பதிப்பின் விளம்பர மேலாளருமான கே.அழகப்பன் மற்றும் அவரது மகன் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கோவில் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது, இரண்டு பேர் உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடு
பட்டுள்ளனர். இதனைகண்ட கிருஷ்ணகுமார் ஓடிச்சென்று கொள்ளையனை பிடிக்க முயன்றுள்ளார். இவருடன் அழகப்பன் மற்றும் அருகாமை வீட்டாரும் சென்றுள்ளனர். இதனை கண்ட கொள்ளையர்கள் இருவரில் ஒருவர் தப்பிஓடிவிட்டார். அதேநேரம், ஒரு கொள்ளையனை கிருஷ்ணகுமார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்துள்ளார். அப்போது, கொள்ளையன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணகுமாரின் மார்பு பகுதியில் பலமாக குத்தியுள்ளார்.

இதில் அவர் படுகாயமடைந்த நிலையிலும் கொள்ளையனை விடாமல் இழுத்து பிடித்துள்ளார். இதற்குள் மற்றவர்கள் அங்கு வந்து கொள்ளையனை மடக்கிபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே கத்தி குத்தில் காயமடைந்த கிருஷ்ணகுமார் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவலை அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, பி.ஆர்.நடராஜன், சி.பத்மநாபன், எம்.கண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று கிருஷ்ணகுமாரை சந்தித்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், தற்போது சிக்கியுள்ள கொள்ளையன் தனிநபரல்ல பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி கும்பலுடன் தொடர்பு இருக்கும் என சந்தேகிக் கிறோம். இக்கும்பல் 9 கார்களை உடைத்து பொருட்களை திருடிவிட்டும், மற்றொரு கோவிலை உடைத்து கொள்ளையடித்து விட்டுத்தான் இப்பகுதியில் நுழைந்து உண்டியலை உடைத்துள்ளனர். இவர் ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்களில் தேடப்படுகிற நபராகத்தான் காவல்துறையின் பட்டியலில் உள்ளார். பிடிபட்ட குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது இவர் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.