புதுச்சேரி,
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமையன்று (ஆக.26) சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கேரள முதல்வர் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. புதுச்சேரி மாநில அரசு சார்பில், அரசு ஊழியர்கள், பொது மக்கள், தொண்டு நிறுவனங்களிட மிருந்து நிதி பெற்று சுமார் ரூ.10 கோடி வரைக்கும் அனுப்ப உள்ளோம்” என்றார்.

புதுவை அரசு, அரசு ஊழியர்கள் இணைந்து ரூ.8 கோடியும், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களிடமிருந்து என்னுடைய கோரிக்கையை ஏற்று ரூ.25 லட்சம் வந்துள்ளது. இன்னும் நிறைய நிதி வருதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  வெளி நாட்டிலிருந்து நிதி பெறுவதை ஏற்க மாட்டோம் என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் தவறு. கேரளாவில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரழிவுக்கு, வெளிநாட்டில் வேலை செய்யும் கேரள மக்கள், அவர்கள் பணிபுரியும் நாடுகள் நிதி வழங்கும் போது அதைப் பெறுவதில் எவ்வித தவறும் கிடையாது. மிகப் பெரிய பூகம்பத்தால் நேபாள நாடு பாதிக்கப்பட்டபோது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உதவி செய்தன. இதில், எந்த அரசியலும் கிடையாது. எனவே, வெளிநாடுகள் கேரள மாநிலத்திற்கு அளிக்கும் உதவியை எவ்வித தடையும் செய்யக் கூடாது என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

நம்முடைய மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களுக்கு தொடர்ந்து அரசு சார்பில் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை சரி செய்து, எந்தெந்த நிறுவனங்களை லாபத்தில் இயக்க முடியுமோ அதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுஇதுவரை 4 நிறுவனங்கள் சம்பந்தமான 4 அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அது அரசின் பரிசீலனையில் உள்ளது. மீதியுள்ள நிறுவனங்கள் அவர்களுடைய பரிந்துரைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்போம்.

Leave A Reply

%d bloggers like this: