திருப்பூர்,
காங்கயம் வட்டத்தில் கிறிஸ்துவ அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டிடத்தில் பொருட்களைச் சேதப்படுத்தியும், தீ வைத்தும் சமூகவிரோதிகள் நாசம் செய்தனர். இந்த அட்டூழியம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் புகார் மனுவை பெற்றுக் கொண்டதற்கு ரசீது தராமல் காவல் துறையினர் அலைக்கழித்தனர்.

காங்கயம் வட்டம் பாப்பினி கிராமத்தில் வரதப்பம்பாளையத்தில் ஜீசஸ் கம்போர்ட்ஸ் யூ டிரஸ்ட் அறக்கட்டளை சார்பில் எஸ்.கிறிஸ்டோபர் சுகுமார் என்பவர் பெயரில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை போதகர் எம்.சாமிநாதன் என்பவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் இந்த சபையின் ஆண்டு விழா இங்கு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காவல் துறையினர், அவர்கள் நடத்திய நிகழ்வில் மற்றவர்களுக்கு இடையூறாக ஒலியின் அளவு அதிகமாக இருக்கிறது எனக் கூறி இசைத்தட்டை இயக்கும் சிடி பிளேயரை எடுத்துச் சென்றுவிட்டனர். காவல் துறையில் உரிய அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்தும்படி கூறியுள்ளனர். அதன்படி காவல் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அந்த நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்வு முடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி சனியன்று அந்த இல்லத்தின் பராமரிப்புப் பணிக்காக சம்பந்தப்பட்ட சபையினர் அங்கு சென்றுள்ளனர்.

பொருட்கள் சேதம்:
அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்த இல்லத்தின் நுழைவு வாயில் திறந்திருந்தது. உள்ளே இருந்த மின் மீட்டர்பெட்டி அடித்து நொறுக்கி உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக் கருவிகள், கட்டிடத்தின் உள்ளே இருந்த மின் மோட்டார், மின் விசிறி, மின் விளக்குகள் ஆகியவையும் நொறுக்கப்பட்டிருந்தன. அவர்கள் பயன்படுத்தும் பாய் விரிப்பு, இருக்கைகள், மேற்கூரை, கதவுகள் மற்றும் திறப்பு விழா கல்வெட்டு ஆகியவையும் உடைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவ இல்லத்தின் மீது வெறுப்பு கொண்ட சமூக விரோதிகள் உள்நோக்கத்துடன் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகத் தெரிந்தது.

இது குறித்து காங்கயம் தாலுகா போதகர் ஐக்கியத்தைச் சேர்ந்தோர் சனியன்று காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், ஏற்கெனவே ஆண்டு விழாவின்போது, யாரோ புகார் கூறியதாக தெரிவித்துத் தான் சிடி பிளேயரை காவல் துறையினர் எடுத்துச் சென்றனர். எனவே இந்த வன்முறை சீர்குலைவு நடவடிக்கையை நடத்தியவர்கள் மேற்படி புகார் கூறியவர்களாக இருக்கக்கூடும் என வலுவான சந்தேகம் உள்ளது. எனவே கிறிஸ்துவ இல்லத்தில் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் இந்த புகார் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான சான்றை காவல் துறையினர் தர மறுத்தனர். மேலும் காங்கயம் காவல் ஆய்வாளர் முருகேசன் மிகவும் மோசமான முறையில் மிரட்டி, அவர்களை வெளியேற்ற முயன்றார். எனினும் புகார் மனுவை பெற்றுக் கொண்டதற்கான சான்று தரும் வரை காவல் நிலையத்தில் இருந்து செல்லப் போவதில்லை என்று உறுதியாக நின்றனர். இதையடுத்து ஞாயிறன்று புகார் மனு பெற்றதற்கான சான்றளிப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிடுமா?
காங்கயம் வட்டாரத்தில் கடந்த பலமாதங்களாக தொடர்ச்சியாக கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களை குறி வைத்து இந்துத்துவ வகுப்புவெறியர்கள் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மேற்படி அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்படுவோரையே மிரட்டிப் பணிய வைக்கும் நடவடிக்கைகளில் காவல் துறையைச் சேர்ந்தோர் ஈடுபடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் நடைபெறும் சம்பவங்களில் உரிய நேரத்தில் தலையிட்டு மதவெறி சக்திகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதுடன், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சட்டத்துக்குப் புறம்பாக ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல் துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என நல்லிணக்கத்தை விரும்பும் பொது நல அமைப்பினர் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.