1084 இன் அம்மா. ஒரு ஆணாக அல்லது பெண்ணாக அல்லது திருநங்கையாக இருந்தால் பெயர் இருக்கும். அப்படிப்பெயர் உள்ள ஒருவருக்குத்தான் அம்மா இருப்பார். ஆனால் 1084 என்கிற எண்ணுக்கு ஒரு அம்மா இருக்க முடியுமா? இது எப்படி சாத்தியமாகும்?

சாத்தியம் என்கிறார் வங்க மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் மகாஸ்வேதாதேவி. 1084 இன் அம்மா என்ற அவரது கதையின் வழியாக. மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி என்ற இடத்தில் அதிதீவிர இடதுசாரி இயக்கம் சாரு மஜூம்தார் தலைமையில் உருவானது .1970-களில் இருந்த அரசியல் வெப்பம் இளைஞர்களைப் பல்வேறு திசைகளில் சிந்திக்க வைத்தது. “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ ? நாங்கள் சாகவோ? அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ ? உயிர் வெல்லமோ ? “ இந்தக் கேள்விகளுக்குப் பலரும் பலவழிகளில் விடைதேடினர். இவை சரியா தவறா என்ற கேள்விக்கு இருவேறு விடைகள் தொடரவே செய்யும்.  ஆனால் ஆளும் வர்க்கத்தின் அடியாட்களாக வளர்க்கப்படும் காவல்துறை, கேள்விக்கேட்க முடியாமல் யாரையும் குண்டுகளால் உடல் சிதைத்துக் கொன்றுவிடலாமா என்று கேள்வி கேட்கிற கதைதான் 1084-ன் அம்மா. உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அந்த அம்மாவின் பிள்ளை ப்ரதி. அதிதீவிர இடதுசாரி இயக்கத்தின் நண்பர்களைக் கொண்டிருந்தவன். அவனுக்கு நந்தினி என்ற காதலியும் உண்டு. சோமு என்கிற நண்பனின் வீட்டில் நான்கு பேர் கூடியிருக்கும் போது அநிந்தியா என்ற எட்டப்ப நண்பனின் உதவியோடு காவல் துறையினர் சுற்றிவளைத்துக் கொன்றுவிடுகின்றனர். ப்ரதியின் சடலத்தை அன்பு மகனின் சிதைக்கப்பட்ட முகத்தைக்கூட காட்ட மறுக்கிறது காவல்துறை. அந்தத் தாயின் தவிப்புதான் கதையின் மையம்.

வீட்டில் இருக்கும் தந்தையும் சகோதரியும் சகோதரனும் ப்ரதியின் மீது அக்கறை செலுத்தாமல் இருப்பதைத் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் யாரோடும் முரண்பட்டு நிலைநிறுத்திக் கொள்ள முடியாத கையறுநிலை. அந்தத் தாய் சோமுவின் வீட்டுக்கு  செல்கிறார். அவனது தாயும் ஆற்ற முடியாத வேதனையில் தவிக்கிறார். மற்றவர்களுக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க ‘இனிமேல் இந்த வீட்டுக்கு வராதீங்க‘ என்று சொல்கிறபோது மனச்சுமை மேலும் கூடுகிறது. பின்னர் ப்ரதியின் காதலி நந்தினியைச் சந்திக்கிறார். ப்ரதிக்கு ஏற்பட்ட கோரமான முடிவை உணர்ச்சி ததும்ப எடுத்துரைக்கிறாள் நந்தினி. தாயின் மனச் சுமை மேலும் மேலும் அதிகரிக்கிறது. முன்நினைவுக் காட்சியாக காவல்துறை அதிகாரி சரோஜ்பால் தம்மிடம் எப்படி நடந்துகொண்டான் என்பதைச் சொல்லும் காட்சி இதயத்தைப் பிசைகிறது.

மகாஸ்வேதா தேவியின் கதையை மேடை எனும் அரங்கக் குழுவினர் நாடகம் ஆக்கியிருக்கிறார்கள். தாயாக மங்கையும் ப்ரதியாக ராஜிவ் ஆனந்தும் சோமுவின் அம்மாவாக ஜெயாவும், ப்ரதியின் காதலியாக சுதர்ஷியும் காவல்துறை அதிகாரியாக அபிலேஷ்சும், ஆழமான அனுபவமிக்க நடிப்பால் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகின்றனர்.  காலந்தோறும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிற காவல்துறையின் அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்களைப் பற்றி அவர்களின் நடிப்பு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தைக் காணும் போது கடந்த கால நிலைமை மட்டுமல்ல; சமகால நிலைமைகளும் கண்முன்னே விரிகின்றன.

நாடகத்தயாரிப்புக்கு இயக்குநர் ரெஜின் ரோசோடு இணைந்து பணியாற்றி இருக்கிற ரவீந்திரன், ஸ்ரீஜித், அஸ்வினி போன்றோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிறைக் கம்பிகள் உள்ள நான்கு சட்டகங்களைக் கொண்டே மொத்த அரங்கத்தையும் இந்த சமூகம் சிறைக்குள் இருக்கிறது என்பதைக் காட்டுவது போல் மிக நேர்த்தியாக வடிவமைத்து இருக்கிறார்கள். எளிமையாக – ஆனால், வலிமையாக ஒரு சிறந்த கருத்தை எடுத்துச் சொல்கிற நாடகமாக அமைந்திருக்கிறது 1084 இன் அம்மா. இரண்டு குழுக்களால் ஒரே நாடகம் நடத்தப்படுவது சிறம்பம்சம். இன்னொரு குழுவில் அம்மாவாக நடிப்பவர் பொற்கொடி.

Leave a Reply

You must be logged in to post a comment.