கோல்டன் சாதனை:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்த 16 வயது இளம் வீரர் சவுரப் சவுத்திரி, இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மிக இளம் வயதில் தேர்வு செய்தது சரியா? என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ஜஸ்பால் ராணா, ரஞ்சித் சிங், ஜித்துராய், ரோஞ்சன் சோதி போன்ற இளம் வீரர்கள் வரிசையில் இடம் பிடித்து ‘கோல்டன்’ சாதனையை படைத்து, தேர்வாளர்களின் நம்பிக்கையை நிரூபித்து, ‘இளம் புயலாக’ உருவெடுத்த அவருக்கு இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி தான் முதல் சீனியர் அளவிலான போட்டியாகும்.

ஜாம்பவான்களுடன்…
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 586 புள்ளிகளுடன் முன்னேறிய சவுரப் சவுத்ரி, ஒலிம்பிக் ஜாம்பவான் ஜப்பான் வீரர் மத்சுடா டொமோயுகியுடன் மல்லுக்கட்டினார். கடும் போட்டி நிலவிய போதும் சவுரப் பதற்றமடையவில்லை. நம்பிக்கையுடன் எதிர்கொண்டு 240.7 புள்ளிகளுடன் ஜப்பான் வீரரை வீழ்த்தி சரித்திரம் படைத்தார்.

பிளாஸ்டிக் துப்பாக்கி….
‘‘குழந்தைப் பருவத்தில் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் துப்பாக்கியைப் பிடித்த கைகளால் பலூன்களை சுட்டுத் தள்ளிய குறிதான், அவரை துப்பாக்கிச் சுடும் வீரராக மாற்றியது. தினமும் அதிகாலை 5 மணிக்கே பயிற்சியை தொடங்கி விடுவார். சில நாட்களில் பத்து மணி நேரத்திற்கும் கூடுதலாகவும் பயிற்சி எடுத்திருக்கிறார். எங்களின் சொந்த கிராமமான கலினாவில் பயிற்சிக்கு வசதி வாய்ப்புகள் இல்லை என்பதால், மீரட்டிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்தாத் அருகிலிருக்கும் பினோலி கிராமத்தில் உள்ள ‘அமித் ஷெரன்’ அகாடமியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 13.  பிறகு, ‘வீர் ஷக்மால்’ ரைபிள் கிளப்பில் இணைந்தார். பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா, அமித் ஷெரன் அளித்த பயிற்சியும் சவுரப் சவுத்திரியின் கடின உழைப்பும் சேர்ந்து, மூன்றே ஆண்டுகளில் ஜூனியர் உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார். இதை வர்ணிக்கவே வார்த்தைகளே கிடையாது’’ என்று அவரது மூத்த சகோதர் நிதின் சவுத்திரி தெரிவித்திருக்கிறார்.

குவியும் பாராட்டுக்கள்…
இளைய மகனின் சாதனையைப் பாராட்டி நாள்தோறும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருப்பதால், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். ஐம்பது லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் அரசு வேலையும் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

குரு தட்சணை…
பதினோராம் வகுப்பு படித்து வரும் சவுரப் சவுத்திரி, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஜாட் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை விவசாயம் செய்து வந்தார். ஆரம்பத்தில் துப்பாக்கி வாங்குவதற்குக்கூட வசதி யில்லை. எனது துப்பாக்கியைதான் பயன்படுத்தி வந்தார். அதற்கு “குரு தட்சணையாகதான்” இன்றைக்கு தங்கத்தை வென்று கொடுத்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு டோக்கியாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று அசத்துவார் என பெருமிதம் கொள்கிறார் பயிற்சியாளர் அமித் ஷெரன்.

விவசாயியின் மகன்!
தங்க மகன் சவுரப் சவுத்திரியின் தந்தை ஜக்மோகன் சிங், தாய் பிரிஜேஷ் கரும்பு விவசாயம் செய்து வந்தாலும் படிப்புக்கு எந்த வகையிலும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதோடு, விளையாட்டு ஆர்வத்திற்கு தோளோடு தோள்கொடுத்து துணை நின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை துவக்கியவர் என்றாலும் ஆசிய விளையாட்டு வரலாற்றில் இளம் வயதில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்கள் பட்டியலில் இந்தியாவையும் இடம் பெறச் செய்த சவுரப் சவுத்திரி கூறுகையில், ‘‘இந்தத் தொடரில் ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்கள் வரிசைகட்டி நின்று போதும் நான் எந்த நெருக்கடியையும் உணரவில்லை; நம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். இதனால், தங்கத்தை வெல்ல முடிந்தது’’ என்றார்.

தனது தந்தையைப் போன்று விவசாயத் தொழில் அதிகம் பிடிக்கும் என்றாலும் விளையாட்டு பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதால் விவசாயத்தில் ஈடுபட போதிய நேரம் கிடைப்பதில்லை. ஆனாலும் பயிற்சி இல்லாத சமயங்களில் சொந்த ஊருக்குச் சென்று தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறுகிறார்.

ஒலிம்பிக்கிலும்…
ஆசிய விளையாட்டில் இலக்கை குறிவைத்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த விவசாயி மகன் என்பது இந்தியாவுக்கு கூடுதல் பெருமையாகும். ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்த்ராவை ‘ரோல் மாடலாக’ கொண்டு விளையாடி வரும் இந்த இளம் புயல், இன்னும் 2 ஆண்டுகளில் ஆசியாவில் (ஜப்பானில்) நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டிலும் இந்தியாவுக்கு தங்கம் வென்று வர அனைவரும் வாழ்த்துவோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.