தீக்கதிர்

அவ்வளவுதானா?

மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதையில் செலுத்த முயன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.  இந்த வழக்கை அறிவியல் பூர்வமாக, நியாயமாக, நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தி வருவதாக வும் விசாரணை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது. மாணவிகளை தவறான வழியில் நடத்த முயன்றது தொடர்பாக நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக பேராசிரியர் நிர்மலாதேவி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிபிசிஐடி இந்த விசாரணையை முழுமை யாக மேற்கொண்டுள்ளதா என்ற ஐயப்பாடு எழுகிறது. மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் மாநில ஆளுநரின் பெயரும் அடிபட்டது. அந்த ஆடியோவை கவனமாக கேட்கும் யாரும், இதில் மிகப்பெரிய மனிதர்களுக்கு தொடர்பு இருப்பதையும், ஒரு வலைப்பின்னல் நெடுங்காலமாக செயல்பட்டு வந்துள்ளது என்பதையும் உணர்வர்.  ஆனால் நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூன்று பேரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டு மற்றவர்களை தப்பவைக்கும் நோக்கிலேயே விசாரணை திசை மாறிச் செல் கிறதோ என்ற ஐயப்பாடு பலருக்கும் எழுந்தது. தற்போது இந்த மூவரோடு மட்டும் விசயத்தை முடிக்கப் பார்ப்பது இந்த ஐயப்பாட்டை உறுதி செய்கிறது.

இந்த விவகாரம் வெளிவந்த உடனேயே ஆளுநர் தரப்பில் தேவையற்ற அதீத பதற்றம் காணப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்த விசாரணைக் குழுவை ஆளுநர் கலைத்ததோடு இவராகவே முன்வந்து சந்தானம் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். அந்தக்குழுவும் விசாரித்து ஆளுநரிடம் அறிக்கை அளித்ததாக தக வல்கள் வெளியாகின. போலீசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காகவும், தாமதப்படுத்துவதற் காகவுமே இந்த விசாரணைக் குழு நியமிக்கப் பட்டதாக விமர்சனம் எழுந்தது. சந்தானம் குழு தாக்கல் செய்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.

கருப்பசாமி மற்றும் முருகனுக்காக மட்டுமே இந்த விவகாரத்தில் நிர்மலா தேவி ஈடுபட்டார் என்பது ஏற்கத்தக்கதாக இல்லை. இந்த விசயத்தில் ஆளுநர் பதவி விலகி, முழுமையான விசாரணையை எதிர்கொண்டிருக்க வேண்டும். பல்கலைக் கழக உயர் அதிகாரிகள் உட்பட யார் யாருக்குதொடர்பு என்பது வெளியே கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் சிபிசிஐடி விசார ணையை முடிக்க முயல்வதாகவே தெரிகிறது.  மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்த முயலும் போக்கு பல்வேறு உயர் கல்வி நிலையங்களில் நடக்கும் நிலையில், குற்றமிழைத்தவர்களை தப்பவிடுவது நல்லதல்ல.