தரங்கம்பாடி:
ஆக்கூர் மடப்புரத்தில் 30 ஆண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த பாசன வாய்க்காலை பொதுமக்கள் தூர்வாரினர்.

நாகை மாவட்டம் ஆக்கூர், மடப்புரம், சிதம்பரம் கோவில்பத்து, உடையவர் கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய பாசன வாய்க்காலாக உள்ளது கருவேலி – பூந்தாழை வாய்க்கால். இந்த வாய்க்காலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்படும் இப்பகுதி நிலங்கள் பெரும்பாலும் தரிசாகவே கிடக்கும் சூழலில் பாசன வாய்க்காலின் நிலையோ பரிதாபத்தில் உள்ளது.

முற்றிலும் புதர் மண்டி, செடி கொடிகள் படர்ந்து கிடந்ததால் அதனை தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கைகள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் ஆக்கூர் – மடப்புரம் கிராம பொதுநலச் சங்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் பல லட்ச ரூபாயை செலவு செய்து கடந்த 3 தினங்களாக தூர்வாரினர். பொதுநல சங்கத் தலைவர் ஆக்கூர் செல்வ அரசு, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் அன்புநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தூர்வாரும் பணியினை ஒருங்கிணைத்தனர். பல கோடி ரூபாய் செலவு செய்து தூர்வாரும் பணியினை மேற்கொள்வதாகக் கூறும் அரசு நிர்வாகம். பெரும்பாலான இடங்களில் தூர்வாராமலேயே ஏமாற்றியுள்ளது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.