திருவனந்தபுரம்;
கேரள வெள்ளப் பாதிப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாக தான் கூறியதில் எந்தக் குழப்பமும் இல்லை என்று, பாஜக-வினருக்கு பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த உதவிக்காக, பிரதமர் நரேந்திர மோடியே, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்திருப்பதையும், பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்.கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய அமீரக அரசு, கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது; அமீரகத்துடன் கேரளா சிறப்பான உறவுமுறையைக் கொண்டுள்ளது; மலையாளிகளின் மற்றொரு வீடாக அமீரகம் உள்ளது; அவர்களின் உதவிக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார். “அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் ‌ஷயத் அல் நயான், பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்புகொண்டு- தாங்கள் உதவிசெய்யும் தகவலைத் தெரிவித்திருக்கிறார்” என்றும் விஜயன் குறிப்பிட்டிருந்தார்.

இது கேரள மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தங்களின் நன்றியை உளமாரத் தெரிவித்தனர். வெளிநாடு ஒன்றே, இவ்வாறு 700 கோடியை அள்ளித்தரும்போது, மத்திய அரசு தனது நாட்டிலுள்ள மாநில மக்களை கைவிடக் கூடாது என்ற கோரிக்கைகளையும் அவர்கள் எழுப்பினர்.

இந்நிலையில்தான் திடீரென ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியை மத்திய அரசு ஏற்காது என்ற தகவல்கள் பரவின. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் எந்தவொரு வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து இந்தியா நிதியுதவியைப் பெறுவதில்லை என்பதால், கேரள பேரிடருக்கும் வெளிநாட்டு உதவியை இந்தியா பெறாது என்று கூறப்பட்டது. கத்தார், தாய்லாந்து, ரஷ்யா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் உதவியையும் மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.இது கேரள மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளத்திற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை மத்திய அரசு ஏன் தடுக்கிறது? என்று கேள்விகள் எழுந்தன.
எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாமலேயே மோடி அரசு இப்பிரச்சனையை ஊடகங்கள் மூலமாக உலவ விட்டது. ஒரு கட்டத்தில் கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையை ஏவிவிட்டு, “700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக எங்குமே அறிவிக்கவில்லை; அப்படியிருக்க, அதைத் தடுப்பதற்கான தேவை எங்கிருந்து வந்தது?” என்று பேச வைத்தது.

அதற்கேற்பவே, இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அகமது அல்பன்னா என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், “கேரளாவிற்கு உதவுவதற்காக தேசிய குழு ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம்; இந்தக் குழுவானது இந்திய வெளியுறவு அமைச்சகத்துடனும் தூதரகத்துடனும் இணைந்து பணியாற்றி தேவையானவர்களுக்கு நிதி சென்று சேர்வதை உறுதி செய்யும்; ஆனால் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் அமீரகம் வெளியிடவில்லை” என்று தெரிவித்தார்.

உடனே பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “அமீரகத்தின் தூதரே இவ்வாறு கூறிவிட்ட நிலையில், அந்நாடு நிதியுதவி அளிக்க முன்வந்தது என்று கூறியதற்கு முதல்வர் பினராயி விஜயன் ஆதாரம் தர வேண்டும்” என்று வேகம் காட்டினார்.

இந்நிலையில் வெள்ளியன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், “ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவி குறித்து எந்தக் குழப்பமும் இல்லை; முன்பு நான் குறிப்பிட்டபடி, நிதியுதவி அளிப்பது குறித்து அமீரகத்து இளவரசர், பிரதமர் மோடி இடையே ஆலோசனை நடந்துள்ளது” என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும், “அந்த ஆலோசனையின்போது, அமீரக இளவரசர் 100 மில்லியன் டாலர் வரை (தோராயமாக 700 கோடி) கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கிறோம் என்று பிரதமர் மோடியிடம் கூறியதாக தொழிலதிபர் யூசுப் அலி என்னிடம் கூறினார்; நான் அவரிடம் இதனை வெளியில் சொல்லலாமா என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்; அதற்கு அவர், சொல்லலாம் பிரச்சனை இல்லை என குறிப்பிட்டார்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, “ஐக்கிய அரபு அமீரகம் கேரளத்திற்கு உதவிசெய்ய முன்வந்ததாக குறிப்பிட்டு, அதற்காக பிரதமர் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்; சந்தேகம் இருப்பவர்கள், பிரதமர் மோடியின் ட்வீட்டையும் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்” என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

பினராயி விஜயன் குறிப்பிட்ட- அந்த ட்விட்டர் பதிவில், “இந்தக் கடினமான நேரத்திலும் கேரள மக்களுக்காக ஆதரவளிக்க முன்வந்துள்ள ஷேக் முகமது பின் சயீத் பின் சுல்தானுக்கு மிக்க நன்றி. கேரளா குறித்து உங்களுடைய கவலை, இந்தியா மற்றும் யு.ஏ.இ அரசாங்கம் மற்றும் இரு நாட்டு மக்களிடையில் சிறப்பான ஒரு உறவைப் பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆகஸ்ட் 18-ஆம் தேதியன்று மோடி இதனைப் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: