பெங்களூரு;
ஒரு மாநில அமைச்சர் சொல்லி நான் கேட்பதா..? என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆணவம் காட்டிய நிலையில், “நிர்மலா சீத்தாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கர்நாடக அமைச்சர் சாரா மகேஷ் விளாசியுள்ளார்.“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக இருந்திருந்தால் மக்கள் படும் துயரம், நிர்மலா சீதாராமனுக்கு தெரிந்திருக்கும்” என்றும் சாடியுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெள்ளிக்கிழமையன்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றையும் நடத்தினார்.
அப்போது உடனிருந்த, கர்நாடக மாநில அமைச்சர் சாரா மகேஷ், .“மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநில அரசு அதிகாரிகள் சிலர், தங்களின் பணிகள் குறித்து உங்களிடம் அறிக்கை சமர்ப்பிக்க விரும்புகின்றனர்; அவர்களைச்சந்திக்க முடியுமா? என்று நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டுள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அந்த இடத்திலேயே- மீடியாக்கள் அனைத்தும் இருக்கும்போதே, அமைச்சார் சாரா மகேஷ் மீது, நிர்மலா சீத்தாராமன் சீறிப்பாய்ந்துள்ளார்.
“உங்களுக்கு அதிகாரிகள் முக்கியம் என்றால் எனக்கு எனது பரிவார் (முன்னாள் ராணுவ அதிகாரிகள்) முக்கியம்; எனவே, நான் எனது நிகழ்ச்சி நிரல்படி தான் செல்ல முடியும்” என்று கொதித்துள்ளார். இது நாகரிமற்ற செயல் என்பதோடு, ஒரு மாநில அமைச்சரை அவமதிப்பதாகவும் ஆனது. இதனால் நிர்மலா சீத்தாராமனின் செயலுக்கு கண்டனங்களும் எழுந்தன.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, கர்நாடக அமைச்சர் சாரா மகேஷ், “நிர்மலா சீத்தாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அல்ல. கர்நாடக பாஜக-வால் இம்மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட எம்.பி., இப்படி நியமிக்கப்படும் எம்.பி.க்களுக்கு சாமானிய மக்கள் படும் கஷ்டங்கள் புரியாது; ஏழ்மை குறித்தும் அவர்களுக்கு தெரியாது” விளாசித் தள்ளியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.