திருநெல்வேலி;
கேரளத்தில் ஓணம் பண்டிகை இந்தாண்டு களைகட்டாததால் மலர் ஏற்றுமதி சரிந்தது. இதனால் நெல்லையில் மலர் சாகுபடியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் மானாவாரி மற்றும் தோட்டப் பயிர்களாக பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், தகுந்த விலை கிடைக்காததாலும், பருவம் தவறி பெய்யும் மழையாலும் பயறுவகை மற்றும் காய்கறி வகை சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. மேலும், பல இடங்களில் வறட்சி மற்றும் திடீர் மழையால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனால் மலர் சாகுபடி மீதான ஆர்வம் இம்மாவட்டத்தில் அதிகரித்தது. பிச்சி, மல்லி, கேந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. திருநெல்வேலி சங்கர்நகர், சிவந்திப்பட்டி, மானூர், பள்ளமடை, ஆளவந்தான்குளம், பல்லிக்கோட்டை, செட்டிக்குறிச்சி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப் பூ சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது.

இதேபோல ராதாபுரம், சங்கரன்கோவில், ஆலங்குளம் வட்டார பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மானூர் பகுதிகளில் கோழிக்கொண்டை, கேந்தி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஓணம் பண்டிகையையொட்டி கேரளத்தைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் தோவாளை, சங்கரன்கோவில், நெல்லையில் உள்ள சந்தைகளுக்கு வந்து 500-க்கும் மேற்பட்ட டன் பூக்களை ஆர்டர் கொடுத்து வாங்கி செல்வார்கள். ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாளில் கேந்தி, சம்பங்கி பூக்களின் விலை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.150 வரை உயரும். ஆனால், நிகழாண்டில் சனிக்கிழமை (ஆக. 25) கொண்டாடப்படும் ஓணம், வெள்ளத்தால் களைகட்டாததால் கேந்திப் பூவின் விலை ரூ.30 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கொல்லம், புனலூர், ஆரியங்காவு, வர்கலா, பத்தனம்திட்டை, குட்டிக்காடு, தென்மலை, திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகும். மழை வெள்ளத்தால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓணம் கொண்டாட்டம் சிறப்பாக இல்லை. அதனால் பூக்கள் ஏற்றுமதி சரிந்ததால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.