===இரா.ஜோதிராம்===
நேற்றைய நாளிதழ்களில் கேரளத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனின் உருக்கமான வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

அரசு சார் நிறுவனங்கள், தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பணிகளை செய்து வரும் தொழிலாளர்கள், ஊழியர்கள் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு குறைந்தபட்சம் தங்களது ஒருநாள் ஊதியத்தையாவது வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்பதே அந்த வேண்டுகோள்.

பொதுவாக, கேரளாவில் பருவமழை தேவைக்கேற்ப காலத்தில் பொழிகிறது என்றே எல்லோரும் உணர்ந்திருந்த சூழலில், அது பேரபாயமாக மாறும் என யாரும் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக மழை, வெள்ளத்தின் அபாயத்தை முழுவதுமாக கேரள அரசும், மக்களும் உணர வேண்டியதானது.

வழக்கமான மழை அளவை விட சுமார் 45 சதவீதம் மழை கூடுதலாக பெய்ததே இதற்கு காரணம். இந்தியாவின் இரண்டாவது உயரமான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பின்னால் நிரம்பி வழிந்ததிலிருந்தே இந்த உண்மையை உணர முடியும்.

மழை, வெள்ளத்திலிருந்து அணைகளை காக்கவும், மக்களை காக்கவும் கேரள மாநிலத்தில் உள்ள 40 அணைகளையும் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 8 மாவட்டங்கள் மிகப்பெரிய வெள்ள அபாயத்தின் சேதத்திற்கு ஆட்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 8 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதிலிருந்தே இந்த பெரும் துயரத்தை அறிய முடியும்.

கடந்த 3 நாட்களாகத்தான் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது.
இந்த மழை, வெள்ளம் ஏற்படுத்தியிருக்கிற சேதாரம் என்பதை ஈடுகட்டி அந்த மாநிலம் முன்னேற சில மாதங்கள் பிடிக்கலாம். ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கிற சூழலில், சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கே நிவாரணம் நிதியாக வசூலாகியிருப்பதாக தெரிகிறது.

எனவே தான் கேரளாவின் முதலமைச்சர் அனைத்து தரப்பு தொழிலாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நிதி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதம் மரித்துவிடவில்லை என்பதை வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் இந்திய மாநில அரசுகள் தங்களால் இயன்ற நிதியை மனமுவந்து வாரி வழங்கியுள்ளன.

இதில், அரசியல் வேறுபாடில்லாமல் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது நிதியிலிருந்தும், அவர்களது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியத்தையும், பொதுமக்கள் உச்சபட்சம் தங்களால் இயன்ற பொருளுதவியையும் வழங்கியிருக்கிறார்கள்.
கரூரைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது இருதய அறுவை சிகிச்சைக்கான சேமிப்பை வழங்கியிருக்கிறார். விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது சைக்கிள் வாங்கும் கனவை நனவாக்க வைத்திருந்த சேமிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த சிறுமிகளின் உதவும் மனமே எல்லாவற்றுக்கும் மேலான எடுத்துக்காட்டு.

சூடாகும் பூமி
பல ஆண்டுகளாக பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் என்ற கருத்துக்கள் உலக அரங்கில் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சர்வ வல்லமை பொருந்திய ஏகாதிபத்திய நாடுகள் கூட இன்றைக்கு இதன்மீது மிகப்பெரும் அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டது. இதற்கு இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? இதன் விளைவுதான் கேரளாவில் இன்று ஏற்பட்ட மழை, வெள்ள சேதம்.

இயற்கையை பாதுகாக்காவிடில் அது மக்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கவே செய்யும் என்பதை இந்த வெள்ளச்சேதம் உணர்த்திவிட்டது. கேரளம் மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பாக மராட்டியம், குஜராத்தோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் நமது தமிழகத்தின் தலைநகரான சென்னையும் இந்த வெள்ளத்தால் அழிவை சந்தித்தது கொஞ்சம் நஞ்மல்ல.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வெள்ளத்தால் மரணம், இயந்திரங்கள் பழுதாகி லாயக்கற்றவையானது உள்பட சொல்லிமாளாத சேதங்களை நாம் சந்தித்தோம்.
நமது நீலகிரி மாவட்டத்தில் கூட யானைகளின் வழித்தடத்தில் கட்டப்பட்டிருக்கிற 45 ரிசார்ட்டுகளை சீல் வைக்க உத்தரவிட்டதை அதில் அறிவோம். 10 ஆண்டுகளுக்கு முன்னால் கொடைக்கானல் மலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் விவகாரம் ஊரறிந்த ஒன்று.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 மாவட்டங்களில் கரையோரத்தில் வாழும் மக்கள் படக்கூடிய துயரை இப்போது பார்த்து வருகிறோம். கொள்ளிடம் ஆற்றில் பாலங்களே அடித்துச் செல்லப்படுவதும், தடுப்பணைகள், மதகுகள் உடைந்து லட்சக்கணக்கான கன அடி நீர் விரையமாகி கடலுக்கு செல்வதையும் கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பருவநிலை மாற்றம் என்பது ஒவ்வொரு வருடத்தில் இயல்பான மழை அளவை தவறவிடுவதும், கடுமையான வறட்சியை உருவாக்குவதும் சில ஆண்டுகள் கழித்து இடைவிடாது வாரக்கணக்கில் பெய்து பேரழிவை உருவாக்குவதுமான ஒரு கட்டத்திற்கு போய்விட்டது.

ஆகவே, இதற்கு ஏற்றாற்போல் அரசுகள் நீர் மேலாண்மையை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்தால் இந்தியாவின் நெற்களஞ்சியமாகவே தமிழகம் மாறிவிடும்.

ஒகேனக்கல்லிலிருந்து கால்வாய் வெட்டி தென்பெண்ணையாற்றில் இணைப்பதும், காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதும், காவிரியில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகள் கட்டுவதும் மிகப்பெரும் பயன்தரும் திட்டங்களாகும்.
இனியாவது மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு. இல்லையெனில், வெள்ளத்தினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம்; அதனால் மக்களுக்கு ஏற்படும் சேதாரம் கூடிக்கொண்டே போகும்.

செல்லூரின் சோகம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மதுரை நகரில் உள்ள செல்லூரில் 25 ஆயிரம் கை நெசவு தறிகள் அழிந்ததும், அதனால் சுமார் 50 ஆயிரம் கைத்தறி தொழிலாளர்களும், அதன் உபதொழில்களில் ஈடுபட்டவர்களும் சொந்த ஊரிலேயே அகதிகளான சோகம் மதுரையில் நிகழ்ந்தது. கோவைக்கு அடுத்தபடியாக டெக்ஸ்டைல் நகரம் என்றழைக்கப்பட்ட மதுரையில் அத்தோடு கைத்தறி நெசவுத் தொழில் காணாமல் போய்விட்டது. இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் கரூர், சென்னிமலை, ஈரோடு, திருப்பூர் என இடம்பெயர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

எஞ்சி இருப்பவர்களும் கிடைக்கின்ற வேலையை பார்ப்பவர்களாக மாறி இன்றாக்கும் பட்டினியோடு போராடிக்கொண்டிருக்கிற அவலம் மதுரை நகரில் நீக்கமற நிறைந்துள்ளது.
கண்மாய்களை ஆழப்படுத்துதல், குளங்களை தூர்வாறுதல், அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்துதல் போன்றவற்றை வருடந்தோறும் செய்வதன் மூலமே இவற்றையெல்லாம் தடுக்க முடியும். இல்லையெனில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை சந்தித்தே தீர வேண்டும்.

கட்டுரையாளர் : மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

 

Leave a Reply

You must be logged in to post a comment.