சண்டிகர்;
ஹரியானாவில் தலித் குடும்பம் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியானா மாநிலம் மிர்ச்பூர் கிராமத்தில், கடந்த 2010-ஆம் ஆண்டு, தலித் மக்கள் மீது, ஜாட் பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். தலித் மக்களின் குடிசைகளுக்கும் தீ வைத்தனர். இதில் ஒரு முதியவரும், அவருடைய மாற்றுத்திறனாளி மகளும் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய விரைவு நீதிமன்றம், வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த 97 பேரில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, 12 பேருக்கு சிறைத்தண்டனை என 15 பேரை மட்டும் தண்டித்தது. ஏனைய 82 பேரை விடுவித்தது. எனினும், அந்த 15 பேரும்கூட தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போதே இவர்களில் 2 பேர் இறந்து விட்டனர்.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், 33 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நிறுத்தி வைத்தனர். மேலும் குற்றவாளிகள் 12 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்தும் தற்போது தீர்ப்பு அளித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.