கும்பகோணம்;
கும்பகோணம் கூட்டுறவு ஊழியர் சிக்கனம் மற்றும் கடன் சங்கம் நிர்வாகக் குழு தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களுக்கு உடன் ஒப்புகைச் சீட்டு வழங்காததால் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தெரிவித்ததாவது:-
கும்பகோணம் டி.451 கூட்டுறவு ஊழியர் சிக்கனம் மற்றும் கடன் சங்க நிர்வாகக் குழுவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாததால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 31 இல் அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு சனியன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்க வேட்பாளர்கள் தலைமயிடமான கும்பகோணம் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன சங்க அலுவலகத்தில் நிர்வாகக் குழுவின் 11 உறுப்பினருக்கான வேட்பு மனுக்களை சிஐடியு உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்க அங்கத்தினர் தாக்கல் செய்தனர்.

ஆனால், ஆளும் அதிமுக கட்சியின் தலையீட்டால் நீண்ட நேரம் வரை வேட்பு மனு பெற்று கொண்டதற்கான ஒப்புகை ரசீது வழங்காமல், காரணமின்றி காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், உயர் அதிகாரிகளுக்கு சிஐடியு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஒப்புகைச் சீட்டு கொடுக்க வலியுறுத்தப்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்பட்டது. வேட்பு மனுவின் போதே ஜனநாயக மாண்பை மதிக்காத நிர்வாகம், தவறைத் திருத்திக் கொண்டு கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.
இவ்வாறு சி.ஜெயபால் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத் தலைவர் சேகர், மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.ராஜாராமன், நாகை மாவட்டச் செயலாளர் செல்வகுமார், திருவாரூர் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் மற்றும் சங்கத்தினர் உடனிருந்தனர்.
அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் இடைக்காட்டு கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு கூட்டுறவுத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்ய, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் காத்து இருந்தும் காவல்துறையினரை தவிர மற்ற அதிகாரிகள் வராத காரணத்தால், பொதுமக்களும் சேர்ந்து வங்கி முன்பு காத்திருந்தனர். அதிகாரிகளின் செல்பேசிகள் இயங்கவில்லை. தேர்தலில் குளறுபடி செய்ய முயற்சி நடப்பதாகவும் அப்படி நடந்தால் போராட்டம் நடத்தி அரசை முறையாக தேர்தல் நடத்த நிர்ப்பந்தம் செய்வோம் எனவும் பொதுமக்கள் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தவர்கள் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.