===ஐ.வி.நாகராஜன்===
மேட்டூர் அணையிலிருந்து 2.5 லட்சம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு கீழே கரூர் மாயனூர் தடுப்பணை, திருச்சி முக்கொம்பு தடுப்பணை, தஞ்சை கல்லணை தடுப்பணை, அணைக்கரை தடுப்பணை ஆகியவை உள்ளன. இவை நான்கும் தடுப்பணைகளே தவிர நீரைத் தேக்கி வைத்து தேவைப்படும்போது திறந்துவிடும் அணைகள் அல்ல. இங்கிருந்து நீரைப் பிரித்து அனுப்பும் பணிதான் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் இந்த தடுப்பணைகளை அதனுடைய வலுகுறையாமல் பாதுகாத்துப் பராமரிக்க பலகோடி ரூபாய் அளவிற்கு மக்களுடைய வரிப்பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவை முறையாக செலவிடப்பட்டதா என்பது கேள்விக்குறியே?

இப்போது மேட்டூரில் திறந்துவிடப்பட்ட நீரால் முக்கொம்பு தடுப்பணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட பணம் முறையாக செலவிடப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
மதகுகள் உடைவதற்கு மணல் கொள்ளை பெரும் பங்கு வகித்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

குறிப்பாக ஆற்றங்கரையில் எந்த வரைமுறையும் இன்றி மணல் திருடுவது, ஆற்றையே சுரண்டுவது போன்ற காரணங்களால்தான் இந்த அவலம் தொடர்கிறது. இதுகுறித்து அரசு கண்டும் காணாமல் இருப்பதும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மணல் கொள்ளையர்களிடம் பெரும் தொகைபெற்றுக் கொண்டு அவர்களுக்கு துணை போவதும்தான் இந்த நிலைமைக்கு காரணம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முக்கொம்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்பட்டு 200 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், பலமுறை பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த சேதமும் இதற்கு ஏற்பட்டதில்லை.

1983ம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 1.50லட்சம் கன அடிவரை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 4 லட்சம் கன அடிவரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த காலகட்டங்களில் எல்லாம் இந்த தடுப்பணைகளுக்கும் மதகுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்பட்டதில்லை. கடந்த கால பெரு வெள்ளத்தை விடக் குறைவாக வினாடிக்கு 2.50லட்சம் கன அடி தண்ணீர் சென்ற நிலையில், இப்போது மதகுகள் உடைந்துள்ளது என்றால் தடுப்பணைகள் போதிய பராமரிப்பில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் பொதுப்பணித்துறை செயலற்ற துறையாக மாறிவிட்டது. இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனாலும் மாநில அரசு அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. அதுமட்டும் அல்லாமல் மணல் கொள்ளையை தடுக்கவும் அரசு தவறிவிட்டது என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பொறுப்பற்ற பொதுப்பணித் துறையின் முகத்திரையும், அரசின் மெத்தனமும் முக்கொம்பு தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

இப்போது கல்லணை, மாயனூர், அணைக்கரை தடுப்பணைகள் வலுவுடன் உள்ளதா என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இன்னொருபுறம் டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாத பெரும் குறைபாடு நீடிக்கிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் பல கிராமங்களுக்கு இப்போதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. இதேபோல் வெண்ணற்றிலிருந்து பிரியும் வடவாற்றிலும் போதுமான தண்ணீர் வராததால் திருவாரூர் மாவட்டத்தின் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, நிம்மேலி, மேலநத்தம், மகாராஜபுரம் ஆகிய கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, வெள்ளையாறு, பாண்டவையாறு, ஓடம்போக்கி, முள்ளியாறு, பாமணியாறு, அடப்பாறு, அரிச்சத்திரா நதி, மரைக்கா கோரையாறு போன்றவற்றில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டும் போதுமான அளவிற்கு தண்ணீர் ஓடவில்லை.

அதேபோல் நாகை மாவட்டத்தில் கடைமடையான சீர்காழி தாலுகாவில் உள்ள கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் கொள்ளிடம் தெற்குராஜன், புதுமன்னியாறு, பொறையாறு வாய்க்கால் கழுவம்மலையாறு உள்ளிட்ட வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் பராமரிப்பின்றி தூர்வாராமல் செடி கொடிகள் படர்ந்து கிடப்பதால் தண்ணீர் கொஞ்சம் எட்டிப்பார்த்தாலும் முழுமையான அளவிற்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கால் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிக்கு முறையாக திரும்பிவிடுவதற்கான நீர் மேலாண்மைக் கொள்கையோ, நீர் சேமிப்புத்திட்டமோ எதுவும் தமிழக அரசிடம் இல்லை. இதன் விளைவாக ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கும்; மற்றொரு பக்கம் வறட்சியும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள விசித்திரமான நிலையை டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: