===க.கனகராஜ்===                                                                                                                                                                      இந்து தமிழ் திசை நாளிதழ் 21.08.18 அன்று “கேரளாவில் இயற்கையின் வதம்… வீழ்ந்தது மதம்… சுடர் விடும் மனிதம்! ” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரை ஆர்எஸ்எஸ் அமைப்பை மிகப் பெருமளவிற்கு இடிபாடுகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக திட்டமிட்டு எழுதப்பட்டது என்பதை சமீப காலமாக கேரள நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும்.

முதன்முதலில் தாங்கள் களத்தில் நிற்கிறோம் என்று ஆர்எஸ்எஸ் சில புகைப்படங்களை வெளியிட்டது. பல பேர் அதைப் பாராட்டி எழுதிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு புகைப்படங்கள் அனைத்தும் கேரளாவில் 2012ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது எடுத்தது என்பதும், சில படங்கள் 2017ல் குஜராத் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

இப்படி அம்பலப்பட்டுப் போன பிறகு ஐய்யப்பனை துணைக்கு அழைத்துக் கொண்டு, மாதவிடாய் காலப் பெண்களை சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் வரலாம் என்று சொன்னதால்தான் கேரளாவில் இத்தனை பேரழிவு என்று கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டங்களில் ஆர்எஸ்எஸ் இன் ஆரம்ப நிலை ஊழியர்கள் மட்டுமின்றி குருமூர்த்தி போன்ற டைரக்டர்களும் கலந்து கொண்டார்கள்.

இத்தனையையும் மீறி தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் உதவிகள் வர ஆரம்பித்தன. கேரளாவில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி அந்த மதம் இந்த மதம் என்றில்லாமல் அனைவரும் ஒற்றை மனிதனாய் ஒரே குறிக்கோளோடு மீட்புப் பணிகளில் இறங்க ஆரம்பித்தனர். ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு வெறி பிடித்துவிட்டது.
‘‘கேரளா ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக மனிதவளக் குறியீட்டில் இருப்பதாக தம்பட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு யார் உதவியும் தேவையில்லை; அவர்களுக்கு உதவியே செய்யாதீர்கள்’’ என்று முகநூல் பக்கங்களில் பதிந்து தள்ளினார்கள்.
சுரேஷ் கொச்சாட்டில் என்கிற நபர் ‘‘கேரள மக்கள் அனைவரும் பணக்காரர்கள், நீங்கள் கொடுக்கிற ஒரு ரூபாய் 2 ரூபாய் அரிசியை அவர்கள் சாப்பிடமாட்டார்கள். எனவே, அரிசி அனுப்பாதீர்கள். பாத்திர பண்டங்கள் அனுப்பாதீர்கள். உதவிப் பொருட்களை அனுப்பாதீர்கள்.

எந்தப் பொருளையும் அவர்களுக்கு அனுப்ப வேண்டாம். ஒருவேளை பணமாக உதவி செய்ய நினைத்தால் அதை அரசு நிதிக்கு அனுப்பாதீர்கள். அங்குள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான சேவா பாரதிக்கு அனுப்புங்கள்’’ என்று இனிமையான நேர்த்தியான ஆங்கிலத்தில் விஷம்தோய்ந்த கருத்துக்களை விதைத்திருந்தார்.

மற்றொரு நபர் ராணுவ சீருடையில் தோன்றி, கேரள அரசு மீட்புப் பணிக்காக வந்த ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்று பேசுவதுபோல் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவை தலச்சேரி தொகுதி பாரதிய மகிளா மோர்ச்சா என்கிற அமைப்பின் முகநூல் பக்கத்திலிருந்து 28000 முறை பகிரப்பட்டுள்ளது. (https://www.thehindu.com/news/national/kerala/kerala-battles-fake-news-along-with-floods/article24732678.ece)

வேறு வழியின்றி வழக்கத்திற்கு மாறாக ராணுவத்தின் ஏடிஜிபி, அவன் ஆள்மாறாட்டப் பேர்வழி, ராணுவத்தைச் சார்ந்தவன் அல்ல, அவன் சொல்வது பொய் என்று அறிக்கை வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. (https://twitter.com/adgpi/status/1031210845508792320/photo/1)
இதேபோன்று நூற்றுக்கணக்கான டுவிட்டர் மற்றும் முகநூல் பதிவுகளில் கேரளாவுக்கு பணம் அனுப்பாதீர்கள் என்று கொஞ்சமும் மனிதத் தன்மையற்று வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதே இந்து தமிழ் திசை பத்திரிக்கையில் இந்த செய்திக் கட்டுரைக்கு மேலே, காண்டம் அனுப்பலாமா என்று பதிவிட்ட ஒருவர், ஓமன் நிறுவனத்தால் வேலையிலிருந்து நீக்கப்பட்டது செய்தியாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்படி எந்த செய்திகளைப் பற்றியும் கவலைப்படாமல், ஆர்எஸ்எஸ் இந்த இடிபாடுகளிலிருந்து மீண்டு வருவதற்கு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்து தமிழில் செய்திக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

கேரளாவில் எந்தவொரு கட்சியும் எந்தவொரு கொடிகளோடும் நிவாரணப் பணிகளை ஈடுபடவில்லை. அத்தனை பேரும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் மட்டும் விளம்பரங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இது முதல் முறையும் இல்லை. கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.

ஏனெனில், இதற்கு முன்பும் கூட நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, 20000 பேர் இந்தியாவிலிருந்து நிவாரணப் பணிக்காக ஆர்எஸ்எஸ்காரர்கள் சென்றதாக பு
ளுகித் தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஆர்எஸ்எஸ்ஸே, நேரடியாக அவ்வளவு பேர் எல்லாம் போகவில்லை. அது அதீதமாக சொல்லப்படுகிறது என்று தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு பம்மாத்து செய்ய வேண்டியிருந்தது. (https://www.hindustantimes.com/india/that-s-not-us-rss-steps-in-to-deny-nepal-rescue-act-tweet/story-4TdKhmT0bEBGbYySi5NxSJ.html)

இப்போதும் கூட கேரளாவில் எந்தக் கட்சியும் தனியாக நிவாரண முகாம்கள் அமைக்கவில்லை. அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்தும் அரசின் முகாம்களே. ஆனால், ஆர்எஸ்எஸ் இன் சேவா பாரதி 14 மாவட்டங்களிலும் முகாம் அமைத்துள்ளதாக ஆர்எஸ்எஸ்காரர்கள் சொன்னதை அப்படியே எழுதியிருக்கிறது தமிழ் இந்து.

தமிழால் இணைவோம் என்கிற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் தத்துவத்தை விதைக்கு முயற்சிப்பது பத்திரிகை தர்மத்தை முற்றிலும் சிதைக்கிற செயல்.
தமிழ் இந்து பத்திரிகையின் இந்தச் செயல், அது அவ்வபோது தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அறம் என்கிற வார்த்தைக்கு முற்றிலும் எதிரானது, துரோகமிழைப்பது. துயரங்களிலும் தொண்டுகளிலும் மூழ்கியிருப்போரை, அர்ப்பணித்துக் கொள்வோரை, அதனுள் தன்னை கரைத்துக் கொள்வோரை தெரியாமல் செய்ய, மறக்கடிக்க விளம்பரத்தில் மட்டும் ஈடுபடும் ஒரு அமைப்பை கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமில்லை.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். சிலப்பதிகாரம் செப்பியதாலேயே இது காலாவதியாகிவிட்டதாகாது.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)

Leave a Reply

You must be logged in to post a comment.