புதுதில்லி: 
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் கூட, பாரத ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் இன்னும் 18 ஆயிரத்து 135 ஏடிஎம்-களை சீரமைக்காமலே இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி, பழைய 500 மற்றும் 1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவித்த பிரதமர் மோடி, இவற்றுக்கு மாற்றாகப் புதிய வடிவிலான 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிட்டார். பின்னர் 200, 50, 10 ஆகிய நோட்டுகளும் புதிய வடிவில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.ஆனால், இந்த புதிய வடிவிலான ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு ஏடிஎம் இயந்திரங்களை மாற்றப்படாததால், ஏடிஎம் செயல்பாடே குறிப்பிட்ட காலத்திற்கு முடங்கிப் போனது. தற்போதும் கூட ஏராளமான இடங்களில் ஏடிஎம்-கள் செயல்படவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, தனது 18 ஆயிரத்து 135 ஏடிஎம்-களை மறுசீரமைப்பே செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 59 ஆயிரத்து 521 ஏடிஎம் இயந்திரங்களில் 41 ஆயிரத்து 386 இயந்திரங்கள் மட்டுமே மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சந்திரசேகர் கவுத் என்பவர் எழுப்பியிருந்த கேள்விக்கு இந்த விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.