கோவை,
கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேரளத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு கரம் கொடுக்கும் வகையில் கோவையில் பல்வேறு அமைப்பினர் நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை சிங்காநல்லூர், பீளமேடு கமிட்டிகளின் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிக்கப்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி, போர்வை, லுங்கி மற்றும் பெனாயில், பிளிச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு கோவை ஆவராம்பாளையத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வெள்ளியன்று கொண்டு சென்று ஒப்படைத்தனர்.  முன்னதாக, நிவாரண நிதியாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபனிடம் நகர கமிட்டி தலைவர்கள் வழங்கினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பீளமேடு நகர செயலாளர் பாண்டியன் மற்றும் சிங்கை, பீளமேடு ஆகிய நகரக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.வி.நகர், ஸ்ரீராம் நகர் கிளைகளின் சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.20ஆயிரத்தை கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இடையர்பாளையம் பெரியண்ணன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வெள்ளியன்று கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். கோவை வடக்கு நகரக்குழுவின் சார்பில் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில் வடக்கு நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். இதேபோல்,காளப்பட்டி கிளையின் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக வசூலிக்கப்பட்ட ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வெள்ளியன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் காளப்பட்டி கிளையின் மூத்த தோழர்கள் பி.நடராஜன், கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: