ஈரோடு,
புன்னம் ஊராட்சி பகுதியில் பல லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு எவ்வித பயனும் இன்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா புன்னம் ஊராட்சிக்குட்பட்ட நல்லாநாய்கனூர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் சாக்கடை வசதிகள் இல்லாததால் சாக்கடை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோல் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் மூலமாக 2017-2018 திட்டத்தின்படி ரூ.3.90லட்சங்கள் செலவு செய்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மேற்கொண்டு தண்ணீர் தொட்டி அமைக்கவோ, தண்ணீர் குழாய் அமைக்கவோ எந்தவொரு பணியும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பவானி தாலுகா கமிட்டி உறுப்பினர் டி.ரவீந்திரன் கூறுகையில், நல்லாநாய்கனூர் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே, குடிநீர் வசதி ஏற்படுத்திதருவதாக கூறி ரூ.3.90 லட்சம் செலவு செய்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தும் எவ்வித பயனுமில்லாமல் கிடக்கிறது.

ஆகவே, இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையிலுள்ள சாக்கடை கழிவுகளை உடனடியாக அகற்றி சாக்கடை வசதியை முறையாக செய்து கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.