தீக்கதிர்

பசுவின் பெயரில் கும்பல் கொலை அதிகம் நிகழும் ராஜஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் குப்பைகளை தின்று சுமார் 1000 கால்நடைகள் இறப்பு

ஜெய்பூர் :

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கும்பல் கொலை மற்றும் கொடூர தாக்குதலுக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலத்தில் குப்பை பொருள்களை தின்று இறக்கும் மாடுகளின் எண்ணிக்கை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் அம்மாநில அரசுதான் இந்தியாவிலேயே முதல்முறையாக பசுக்களின் நலனுக்காக ஒரு அமைச்சகத்தையே கொண்டுள்ளது.

ராஜஸ்தான் அரசு சட்டசபையில் கொடுத்த தகவலின்படி, கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 1000 மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குப்பை பொருள்களை உண்டதால் மட்டும் இறந்துள்ளன. இதில், தலைநகர் ஜெய்பூரில் 417, சவாய் மதோபூரில் 346, புண்டியில் 109, ஜலாவரில் 39, ஜோத்பூரில் 2 மற்றும் தௌசாவில் 1 என மொத்தம் 978 கால்நடைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக தலைமையிலான ராஜஸ்தான் அரசின் செயல்பாட்டின் தோல்வி என பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.