திருப்பூர்,
தமிழகத்தில் தொழில், விவசாயம் நாசமாக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தியிருக்கும் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் வரியை உயர்த்துவதா, வேண்டாமா என முடிவு செய்யலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடுத்தர, ஏழை மக்களை கஷ்டப்படுத்தும் விதத்தில் சொத்த வரியை மாநில அரசு அபரிமிதமாக உயர்த்தி இருக்கிறது. ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தலை ஒன்றரை ஆண்டு காலம் நடத்தாமல் உள்ளது. தேர்தலை நடத்தாததால் மத்திய அரசில் இருந்து சற்றேறக்குறைய ரூ.5 ஆயிரத்து 300 கோடி வந்து சேரவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், மத்திய அரசின் நிதியைப் பெற முடியாமல் போனதற்கு எடப்பாடி அரசுதான் காரணம்.இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு மாறாக, அதிகாரிகள் துணையோடு மக்கள் மீது சொத்து வரியை உயர்த்தியது எந்தவிதத்தில் நியாயம்?தமிழகத்தில் விவசாயம், தொழில் நலிவைச் சந்திக்கும் நிலையில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் நசிந்து இருக்கிறது. இங்கு மட்டுமே வசூலித்த தொகையை திரும்பித் தர வேண்டிய வகையில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு நிலுவை உள்ளது. இப்படி தொழிலை நாசமாக்கும் சூழலில் வரி விதிப்பு என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.

தமிழகத்தையே கொள்ளையடிப்பது என்பதில் மட்டும்தான் இந்த ஆட்சியாளர்கள் குறியாக இருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த நிலையில் உள்ளாட்சிகளில் உயர்த்தி இருக்கும் சொத்து வரியை வாபஸ் வாங்க வேண்டும். உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்தான் சொத்து வரியை உயர்த்துவதா, வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சொத்து வரி உயர்வைக் கைவிட வலியுறுத்தி ஆவேச முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: